விழுப்புரம்,
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தனக்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆசிரியப் பணியை ராஜினாமா செய்வதாக விழுப்புரம், மாவட்டம் வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சபரிமாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது ”நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அரசுப்பணியில் இருப்பவர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்கின்றனர். ஒரே கல்வி இல்லாத நாட்டில் ஒரே தேர்வு மட்டும் எப்படி இருக்க முடியும்? அதைக் கேட்க கற்பிக்கும் ஆசிரியருக்கு உரிமை இல்லை. அதனால் பணியைத் துறக்க முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறேன். வகுப்பறைகளில் ஆண்டுக்கு 30 மாணவர்களை உருவாக்கதான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இனி கிராமங்கள்தோறும் சென்று லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்குவேன்” என்றார்.
உங்களின் ராஜினாமா முடிவு குறித்து கணவர் என்ன சொன்னார் என்று கேட்டதற்கு, ”உன்னுடைய எண்ணங்களை முழு சுதந்திர உணர்வோடு வெளிப்படுத்தும் உரிமை உனக்கு உண்டு. வெற்றி பெறும் அனிதாக்களை வருங்காலத்தில் உருவாக்க வாழ்த்துகள் கூறினார்” என்றார் சபரிமாலா.
விழுப்புரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு அவர் அளித்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், ”சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட தேசம் முக்கியம் என்பதால் ஆசிரியப் பணியினை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நேற்று தனது மகனுடன் நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சபரி மாலா இன்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

Leave A Reply