சென்னை;
ஏற்கனவே மன வலியுடன் இருக்கும் எங்களுக்கு, மேலும் மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, மாணவி அனிதா-வின் அண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றும், ‘நீட்’ தேர்வு என்ற சதியால், தனது டாக்டர் கனவு கலைந்து போனதை தாங்க முடியாத அரியலூர் மாணவி அனிதா, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயரச் சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் மனு அளித்த அவர், ‘மாணவி அனிதா மூளைச் சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார்’ என்றும் இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறிவருகிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசிடமிருந்து ஆதாயங்களை அடையும் தனது சுயநலத்திற்காகவே கிருஷ்ணசாமி இவ்வாறு மனச்சாட்சியற்று பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பதிவு மூலம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் “ஒரு ஏழை மாணவி படிப்புக்கு உதவி கேட்டு, உதவ நினைத்தது தப்பா??? சிவசங்கர் எஸ்.எஸ் அண்ணன் மீதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு அண்ணன் மீதும் ஏன் இப்படி அவதூறு பரப்புகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ள மணிரத்தினம், “தயவுசெய்து மனவலிகளுடன் இருக்கும் எங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் மிஸ்டர் கிருஷ்ணசாமி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: