மதுரை;
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம், தமிழகம் முழுவதும் பெரு நெருப்பாக மாறியுள்ளது.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல லட்சம் மாணவ – மாணவியர்,இன்று ஆறாவது நாளாக வகுப்புக்களை புறக்கணித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர். கல்வி நிலையங்கள், மத்திய – மாநில அரசு அலுவலகங்கள் முன்பு, நீட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று ஆங்காங்கே ஊர்வலம் மற்றும் பேரணிகளையும் நடத்தினர்.

சாலை, ரயில் மறியல் போராட்டங்களிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கூடினர். இதைப் பார்த்த காவல்துறையினர், உடனடியாக அவர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்றினர்.

அப்போது சில மாணவர்கள், தமிழன்னை சிலை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘வீர மங்கை அனிதாவுக்கு வீர வணக்கம்’ என்றும், ‘ரத்துசெய் ரத்துசெய்; நீட் தேர்வை ரத்து செய்!” என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

பெரும் எண்ணிக்கையில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தமிழன்னை சிலை முன்பு கூடியும், சாலையில் வாகனங்கள் முன்பு படுத்தும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர்கள், மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

தமுக்கம் மைதானத்துக்குள் நுழைய பல்வேறு நுழைவு வாயில்கள் இருப்பதால், தொடர்ந்து தன்னெழுச்சியாக மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் அவர்கள் எந்த வகையிலும் கூடிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்த காவல்துறையினர், ஆங்காங்கே நின்றுகொண்டு, ஒற்றையாக வரும் மாணவர்களைக் கூட கேள்விகேட்டு திருப்பி அனுப்பியும், கைது செய்து காவல்துறை வாகனத்திலும் ஏற்றினர்.
மாணவர்களும், காவல்துறை எதிர்பாராத வகையில் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து காவல்துறையினரை திணறடித்தனர்.

 

Leave A Reply

%d bloggers like this: