‘அனிதா தற்கொலை’ என்று மீண்டும் மீண்டும் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். தற்கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதே நேரம் அனிதாவை தற்கொலையை நோக்கி தள்ளிய காரணி என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்த மறுப்பது அநீதியாகாதா?

அனிதா முறையீட்டு நியாயத்தை எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் புறந்தள்ளியது. அனிதாவின்  இறுதி மூச்சை நிறுத்தியதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு முதன்மையானது இல்லையா..?  குறிப்பாக மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற  அநீதியான தீர்ப்பும் அனிதாவின் உயிரை தின்று செரித்திருக்கிறதே!.

இந்த அரசுகளின் படுகொலைக்கு நீதி கேட்டும், நீட்டுக்கு விலக்கு கேட்டும் கடந்த 7 நாட்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள்  என்று அனைவரும் தங்கை அனிதாவின் அநீதிக்கெதிராக  ஆவேச போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனரே. இந்த கூக்குரல் கூட நீதிமன்றத்தின் செவிகளில் விழவில்லையே.. ஏன்?.. இப்போது சொல்லுங்கள்… அனிதா தற்கொலை செய்து கொண்டாரா… அதிகார மையங்கள் படுகொலை செய்திருக்கின்றனவா..?

பொதுவாக அரசு நிர்வாகம் நிலைநாட்ட வேண்டிய நீதியை  புறந்தள்ளும் போது மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அதில் பல்வேறு தருணங்களில் இளைப்பாறுதலும் கிடைக்கிறது. ஆனால் அதில் சாமானியனுக்கும், அதிகாரம், அரசியல் பலம், பணம் பலம் படைத்தவர்களுக்கும் சமமான நீதி வழங்கப்படுகிறதா என்றால் இல்லை.  அதில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் பளிச்சிடுகிறதே. பல தருணங்களில் மக்கள் நலனுக்கு எதிரான அரசின் முடிவுகள் நீதிமன்றத்தின் வழியே வலிந்து திணிக்கப்படுவதை  அறவே மறுத்திட முடியாமா?
ஆனால் தமிழகம் நீதி மறுக்கப்பட்டோருக்கு நீதிக்கான புகலிடமாக  பல்வேறு தருணங்களில் இருந்தது என்பது வரலாறு. இங்கிலாந்தில் பெண் என்பதால் மருத்துவக்கல்வி மறுக்கப்பட்டதால் 1878 ல் மேரி ஸ்கார்லீப் மருத்துவம் பயின்றது தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில்தான். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் (1912) முத்துலெட்சுமி ரெட்டியை உருவாக்கியதும் தமிழகம்தான். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சியாக கோலோச்சுவதால், மநுநீதியின் அநீதிகள் நீதியாக்கப்படுகிற அவலம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதல் களப்பலியாகியிருக்கிறார் அனிதா.

அவர் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்திட போராடவில்லை. துன்பப்பட்டு துயரப்பட்டு படித்த படிப்பிற்கு நீதிகேட்டுத்தான் போராடினார். சமூக அநீநி நோயால் பின்தங்கியிருந்த இடத்தில் இருந்து முன்னோக்கி நகர்ந்திடுவதற்கான முதல் அடியைத்தான் எடுத்து வைத்தார். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் உதவியோடு, அவரது காலை முறித்தது மட்டுமல்ல, அவரின் கனவோடு சேர்த்து அவரையும் எரித்து சாம்பலாக்கியிருக்கிறதே…

இதைச் சொன்னால் மத்திய மாநில அரசும் நீதி மன்றமும் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டாமா என்று கூக்குரலிட்டு ஒப்பாரி வைக்கின்றன. கண்டிப்பாக தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்த பதிலை தமிழகத்தின் சிஎம்சி மருத்துவக்கல்லூரி அளித்திருக்கிறது. மருத்துவர்களுக்கான அடிப்படை தகுதி மதிப்பெண்கள் மட்டுமல்ல.. மக்கள் சேவையோடு இணைந்தது என்றும், பயிற்சி பெறும் மருத்துவர்கள் யாருக்காக சேவை புரிவோர் என்பதையும் கவனிக்க வேண்டியது இருக்கிறது என  விளக்கமளித்து நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த மறுத்திருக்கிறது.

அனிதா முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு , இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக  மநுநீதியின் அடிப்படையில் அமைந்திடவில்லை என்பதை முழுமையாக மறுத்திட முடியுமா? இந்த தீர்ப்பு மட்டுமல்ல, சமீப காலமாக நீதிமன்ற தீர்ப்புகளில் மநுவின் மண்டையை மறைக்க தெரிந்தவர்கள் மநுவின் மண்டை மேல் இருக்கும் கொண்டையை  மறைக்க முடியவில்லை என்பதும் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறதே…

இந்திய  தண்டனைச் சட்டம் 375வது பிரிவில் உள்ள உட்பிரிவில் உள்ள   பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக உறவு கொள்வது, கட்டாயப்படுத்தி வல்லுறவிற்கு உட்படுத்தினால் அது பாலியல் வன்புணர்வு அல்லது கற்பழிப்பாகக் கருதப்படும் குற்றம் ஆகும் என்று இருக்கிறது. சமீபத்தில் இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றதில் திருமணத்துக்குப் பிந்தைய கட்டாய பாலுறவு என்பது குற்றமல்ல என்றும்; திருமணமான ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பமின்றி தகாத உறவு கொண்டால் அது குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும் முரண்பட்ட  பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதில்  தனது நிலைபாட்டை முன்வைத்த மத்திய அரசு, மணவாழ்வு வன்புணர்வு ஒரு குற்றச்செயல் என அறிவிக்க இயலாது என்று கூறியது. மேலும் அப்படி அறிவிப்பது குடும்பம் என்ற நிறுவன அமைப்பைச் சிதைத்துவிடும், கணவன்மார்களைத் துன்புறுத்த மனைவிமார்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அரசு சொல்லியது நினைவிருக்கலாம் .

சட்டத்தின் படி வாதிட வேண்டிய நீதிமன்றத்தில், மநுவின் விதிப்படி அரசியல் சாசன சட்டம் மற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்திருக்கிறது. ( மநுவின் 5.154 விதிகளின் படி இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாலான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக ) இங்கும் மத்திய அரசின் உச்சந் தலையில் மநுவின் கொண்டை நட்டமாக நிற்பதை காண முடிகிறதே..

கடந்த சில வாரங்களுக்கு  முன் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஓர் வழக்கில் ” பகுத்தறிவு என்று கூறி மத சடங்குகளை மூடநம்பிக்கை என புறந்தள்ளி மத கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுவதாலேயே  இயற்கை அழிக்கப்பட்டிருப்பதாக” நீதிபதி ஒருவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இந்த தீர்ப்பிற்கும் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது தனிக்கதை. இதுபோலவே கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், வழக்கிற்கு சம்மந்தமின்றி  கோயில்களுக்குள் நுழைவதற்கு இந்த சீருடையில்தான் செல்ல வேண்டும் என சீருடையின் பட்டியலை உயர் நீதிமன்ற கிளை வெளியிட்டதையும் இங்கு இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.

பகுத்தறிவு அடிப்படையில் இல்லாது மதம் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்குவது என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானது ஆகாதா? மதம் சாதி கட்டமைபை தூக்கி பிடிக்கிறது. அதிலும் தீண்டாமையை என்பது மதக்கோட்பாட்டின் படி அவசியம். ஆனால் அதனை அரசியல் அமைப்பு சட்டம் கிரிமினல் குற்றம் என்கிறது. அப்படியானால் இனி  நீதி எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்ற சந்தேகம் எழுவது இயல்புதானே… அதனால்தான் கேட்கிறோம்…அநீதியை மநுதர்மத்தின் பேரில் நீதியாக்கும் அராஜக முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்றப்படுகிறதே.. இப்போது சொல்லுங்கள் அனிதா தற்கொலைதான் செய்து கொண்டாரா, மநுநீதி படுகொலை செய்திருக்கிறதா ?
எம்.பாண்டீஸ்வரி

Leave A Reply

%d bloggers like this: