புதுதில்லி;
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய பாஜக அரசு கூறிய நிலையில், ‘நீட்’ தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அப்போது, எப்படியும் நீட்டிற்கு விதிவிலக்கு பெற்றுவிடுவோம் என்று மாநில அரசு நம்பிக்கை விதைத்தது. மத்திய அரசும் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக கூறியது.

ஆனால், கடைசி நேரத்தில் ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று கூறி மத்திய பாஜக அரசு ‘கழுத்தறுப்பு’ வேலையை அரங்கேற்றியது.இது தமிழக மாணவர்களை கடும் அதிர்ச்சிக்கும் விரக்திக்கும் உள்ளாக்கியது. பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றும் டாக்டர் ஆக முடியாத கவலையில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலையும் செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக வகுப்புக்களைப் புறக்கணித்தும், சாலைகளை மறித்தும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.இந்நிலையில் ஜி.எஸ். மணி என்ற வழக்கறிஞர், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ற அடிப்படையில், அதற்கு எதிராக போராடுவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று அந்த மனுவில் கூறியிருந்தார். தனது மனுவை அவசர வழங்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த மனு,இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்; சிபிஎஸ்இ தரத்துக்கு தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் ஜி.எஸ். மணியின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply