கோவை,

கோவையில் கடந்த திங்கட்கிழமை மாணவர் அமைப்பினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது உதவி பெண் ஆய்வாளர் ஒருவரை, கோவை மத்திய உதவி ஆணையர் ஜெயராமன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில்
இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பெண் உதவி ஆய்வாளரை பாலியல் ரீதியாக பொது இடத்தில் உதவி ஆணையர் ஜெயராமன் துன்புறுத்துவது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது எனவும்,கோவை மத்திய பகுதி உதவி ஆணையர் ஜெயராமன் மீது துறை ரீதியான நடவடிக்கையும்,சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
பொது இடத்தில் காவல் அதிகாரியின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விலக்காமல் , பெண் போலீசாரை விலக்குவதை போல பாலியல்  சீண்டலில் ஈடுபட்டிருப்பதாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மாதர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

உதவி ஆணையர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்று வெளியாகியுள்ள வீடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் , கோவை மாநகர துணை ஆணையர் லட்சுமி , வீடியோ காட்சிகள் குறித்து உதவி ஆணையரிடமும், பெண் எஸ்.ஐ யிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் இன்று மாலைக்குள் விசாரணை நிறைவடையும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.விசாரணைக்கு பின்னரே எந்த மாதிரியான நடவடிக்கை என்பது தெரியவரும் எனவும் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: