பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்வரின் கருத்துகளை நேர்மையான முறையில் மாற்று கருத்துக்களை கொண்டு எதிர்கொள்ள முடியாத கோழைகள் அவரை துடிதுடிக்க சுட்டுக் கொன்றிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு மதச்சார்ப்பின்மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராகதொடர்ந்து குரல்கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்’ என மிக அழுத்தமாகதெரிவித்திருந்தார்.

எழுதுவதோடு மட்டுமின்றி களப் போராளியாகவும் செயல்பட்டு வந்தவர் கௌரி லிங்கேஷ்வர். குறிப்பாக தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழும் சமூக அவலங்களை களப்பணியின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். குஜராத்தில் தலித் மக்களைத் திரட்டி போராடி வரும் ஜிக்னேஷ் மேவானி, தில்லி ஜவ
ஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னய்ய குமார் ஆகியோரை தனது தத்துப்பிள்ளைகள் என்று அறிவித்து அவர்களின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தார். இந்நிலையிலேயே கௌரி லங்கேஷ்வர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்த கோழைத்தனமான படுகொலையை சங்பரிவார அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். நிகில்தாதிச் என்பவர், ஒரு பெண் நாயின் இறப்பிற்கு மற்ற குட்டிகள் வலியுடன் அழுதுகொண்டிருக்கின்றன என தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். இந்த வெறியனை பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்பவராக இருக்கிறார். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரை கொன்ற அதேபாணியில்தான் தற்போது கௌரி லிங்கேஷ்வரும் கொல்லப்பட்டிருக்கிறார்.

தபோல்கர் கொலையின் பின்னணியில் சனாதன் சன்ஸ்தா என்ற சங்பரிவார இந்துத்துவா அமைப்பின் வீரேந்திர டாவ்டே இருப்பதாக சிபிஐ உறுதிப்படுத்தியிருக்கிறது. மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்விலும் இந்த வீரேந்திர டாவ்டே தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைகள் எல்லாம் ஏதோ போகிற போக்கில் நடைபெறுவதில்லை. இந்துத்துவாவிற்கு மாற்றுக் கருத்துடையோரை திட்டமிட்டு படுகொலை செய்யும் பயங்கரவாத அமைப்பாகவே அது செயல்பட்டு வருகிறது. கோட்சேவுக்கு சிலை வைக்கும் இந்த அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் ஊக்கம் பெற்றே வருகிறது.

இந்த காவிபயங்கரவாதம், முற்போக்காளர்களை மட்டும் படுகொலை செய்யவில்லை, இந்திய ஜனநாயகத்தை கருவறுத்து, சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது. இவர்கள் எத்தனை படுகொலைகளை நிகழ்த்தினாலும், பாசிச இந்துத்துவாவிற்கு எதிரான குரல்கள் முன்பை விட மேலும் வலுவாக ஒலிக்கும். துப்பாக்கி குண்டுகளால் ஒரு போதும் முற்போக்கு கருத்தியலை சிதைத்திட முடியாது.

Leave a Reply

You must be logged in to post a comment.