கவுரி லங்கேஷ் அவர்களின் மரணத்தை ஏற்க மறுக்கிறது மனம், அவர் சாதிக்கு எதிராக தொடருந்து குரல் எழுப்பி வந்தார், சாதிய அமைப்பு எத்தனை கொடூரமானது என்பதை அவர் மிக துல்லியமாக அம்பலப்படுத்தி வந்தார்.

அடையாளம் தெரியாத நபர்கள் ஏழுமுறை சுட்டதாகவும் அங்கேயே அவர் வீழ்ந்ததாகவும் செய்திகள் வருகின்றன. இது ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும், இந்த கொலையை நிகழ்தியது இந்துத்துவ தீவிரவாதிகள், அவர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என தொடர்ந்து கொலைகளை நிகழ்த்தி வருகிறார்கள். ஒவ்வொரு கொலையையும் கொண்டாடுகிறார்கள்.

நேற்று கவுரியின் கொலையை பாஜகவினர் கர்நாடாகாவில் கொண்டாடி வருகிறார்கள் என்பது TWITTERல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கொலைகாரர்களை ஏன் உங்களுக்கு தொடர்ந்து அடையாளம் தெரிவதில்லை. இஸ்லாமிய தீவிரவாதத்தை எந்தவித விசாரணையும் இல்லாமல் சம்பவம் நடந்தவுடன் முதல் பக்க செய்தியாக மாற்ற தெரியும் உங்களுக்கு ஏன் இந்து தீவிரவாதம் கண்களில் தெரிவதேயில்லை??

தங்களின் சக பத்திரிக்கையாளர் கொல்லப்படும் போது கூட உண்மையை எழுத பேனாக்களுக்கு மனம் இல்லையென்றால் ஊடக பணியை விட்டு வெளியேறுங்கள், உங்கள் மூளையில் அல்ல மனங்களில் தான் கோளாறும்.

நேற்று இரவு முதல் என்னை என் நண்பர்கள் பலர் எச்சரித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒரே விஷயம் தான். நான் ஊடக பணிக்கு வந்தது சொத்து சேர்க்கவோ, அதில் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து அதிகார அரசியல் செய்யவோ அல்ல. என் காலத்தின் உண்மையை என்னால் பேச முடியவில்லை என்றால் எழுத்தை நான் தொடர மாட்டேன், தினமும் “வாய்க்கா அரிசியை” சட்டையை பையில் போட்டு கொண்டு வீட்டை விட்டு கிளம்புபவன் நான்…

கவுரியின் வழியில், பசவன்னா வழியில், அம்பேத்கரின் வழியில் தொடர்ந்து இயங்குவோம்…..

 -Muthu Krishnan

Leave A Reply