பெங்களூரு,செப்.6
ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரங்களின் வகுப்பு வாதத்திற்கு எதிராக, தீவிரமாக இயங்கி வந்த இடதுசாரி எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் வாசலிலேயே கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல், கவுரி லங்கேஷின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் 8 முறை துப்பாக்கிக்குண்டுகளால் துளைத்து அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்களே இந்த படுகொலைக்கு காரணம் என்றும், மதவெறிக்கு எதிராக, பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பிய நரேந்திர தபோல்கர் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர் வரிசையில் தற்போது கவுரி லங்கேஷையும் அவர்கள் சுட்டுக் கொன்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய ‘லங்கேஷ் பத்திரிகே’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த கவுரி லங்கேஷ், தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்து வந்தார். பிரபல ஆங்கில நாளேடுகளில் சிலவற்றிலும் பணியாற்றிய இவர், பாஜக-வின் இந்துத்துவா கொள்கை மற்றும் வகுப்புவாத நடவடிக்கைக்கு எதிராக ஏராளமான கட்டுரைகளை எழுதி வந்தார்.

குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் இஸ்லாமியர்கள் கொன்றழிக்கப்பட்டது மற்றும் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுண்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் கோப்புகள்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தும் வெளியிட்டார். அவரது உக்கிரமான எழுத்தின் வெப்பச் சூட்டை தாங்க முடியாமல், இந்துத்துவ அமைப்புகள் ஒரு கட்டத்தில் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளைப் போட்டு மிரட்டின.  கடந்த 2016-இல் பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட சில பிரமுகர்களைப் பற்றி காரசாரமாக ஒரு கட்டுரையை தனது ‘லங்கேஷ் பத்ரிகே’ இதழில் பிரசுரித்தார் என்பதற்காக கவுரி லங்கேஷ் மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதற்கெல்லாம் கவுரி லங்கேஷ் அஞ்சுபவராக இல்லை.

மதவெறிக்கு எதிரான ஓங்காரக் குரல்:
“ஒரு இந்திய குடிமகளாக பாஜக-வின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்; நம் அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு மதச் சார்பின்மையைத்தான் கற்றுக் கொடுத்தது; எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்” என்று துணிச்சலுடன் பிரகடனம் செய்தார்.

கவுரியின் தந்தை பி. லங்கேஷ், கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர் என்ற பன்முக பரிமாணங்களைக் கொண்டவர். அவரது வழியில் நடைபோட்ட கவுரி லங்கேஷ், தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரர் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது வீடு பெங்களூருவிலுள்ள ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கிறது. வெளியில் வேலையாக சென்றிருந்த கவுரி, பணிகளை முடித்துக் கொண்டு, செவ்வாய்க்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் தனது காரிலிருந்து இறங்கி வாசலில் இருந்த கேட்டைத் திறந்துள்ளார்.

அதை எதிர்பார்த்த நான்குபேர், கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடலின் தலை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியை 8 குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. இதில் வீட்டின் வாசலிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த கவுரி லங்கேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழமைவாதத்திற்கும், வகுப்பு வாதத்திற்கும் எதிரான ஓங்காரக் குரல் தனது 55 வயதில் ஓய்ந்து அடங்கியது. கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். அவர்களை அடையாளம் காணும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

அதிலொன்றில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து, கறுப்புச் சட்டை அணிந்து ஹெல்மெட்டுடன் வந்த மர்ம நபர் இக்கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரம் என்பதால் அந்த நபரை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இதனிடையே, பகுத்தறிவாளர்கள் எம்.எம். கல்புர்கி, தபோல்கர், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட முறையோடு, கவுரி யின் கொலையும் ஒத்துப் போவது தெரியவந்துள்ளது. கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகளில் பயன்படுத்தப்பட்ட அதேபோன்ற ஆயுதமே கவுரி லங்கேஷ் கொலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொலைக்கு பாயின்ட் 32 ரக பிஸ்டல் பயன்படுத்தப்பட்டு ள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

எனவே, ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களே இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று வலுவாக சந்தேகிக்கப்படுகிறது. பகுத்தறிவு மற்றும் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் பசவேஸ்வரா பற்றி, எம்.எம். கல்புர்கியும், கவுரி லங்கேஷூம் ஒரேவிதமான கருத்து அபிப்ராயத்தைக் கொண்டிருந்ததும் இங்கே பொருந்திப் போகிறது. பசவரின் வசனங்களில் விவரிக்கப்படும் கொள்கைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விஷயத்தில், கவுரி லங்கேஷ் கடந்த சில வாரங்களாக விவாதித்து வந்தது போன்ற நிலைபாட்டையே கல்புர்கியும் கொண்டிருந்தார். அவரும் தமது வீட்டு வாசலில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்த வகையில் காவிப் பயங்கரவாதிகளே திட்டமிட்டு கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றிருப்ப தாக பகுத்தறிவாளர்கள், லங்கேஷின் சக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், முற்போக்கு எழுத்தாளரான கோவிந்த் பன்சாரே 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியும், கல்புர்கி 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு
கவுரி லங்லேஷ் படுகொலை சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, கர்நாடகமுதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.  கவுரி லங்கேஷின் முகநூல் பக்கத்தில் அவருக்கு மிரட்டல் விடுத்திருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாகவும், தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தாலும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ள சித்தராமையா, முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தர விடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக விட மாட்டோம்: கர்நாடக சட்ட அமைச்சர் உறுதி
“கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் நிச்சயம் சதி இருக்க வேண்டும்; கல்புர்கி கொலை போன்று நடைபெற்றுள்ள இந்த விவகாரத்தை நாங்கள் சாதரணமாக விட்டுவிட மாட்டோம்” என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறியுள்ளார். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இந்தச் சம்பவம் பற்றி கேட்டறிந்து வருவதாகவும் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு:

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் தர்ணா நடத்தினர். புதனன்று பெங்களூரு டவுன் ஹாலில் 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பெங்களூரு வேளாண் பல்கலைக் கழக மாணவர்களும் கவுரி படுகொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூர், மாண்டியா, தார்வார் ஆகிய இடங்களிலும் கவுரி படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

ஆந்திராவில் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஐ.வி. சுப்பா ராவ் தலைமையில் ஓங்கோலில் தர்ணா நடைபெற்றது. கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்தும்வரை போராட்டத்தைத் தொடர்வது என அவர்கள் உறுதியேற்றனர். சென்னையில் திரண்ட பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷ், காவி பயங்கரவாதத்துக்கு பலியாகி விட்டதாகக் கண்டனம் தெரிவித்தனர். திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்கள் திரண்டு கண்டனக் குரல் எழுப்பினர். மகாராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இவர்கள் காட்டு மிராண்டிகளே ஏனெனில்…?

ஆர்எஸ்எஸ். பாஜக பரிவாரங்கள் பற்றி தோழர் ஜோதிபாசு குறிப்பிடும் போதெல்லாம் இவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்றே விமர்சிப்பார். தில்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், ஜோதிபாசுவும் சந்தித்த சமயத்தில் “எங்களைக் காட்டுமிராண்டிகள் என்று அடிக்கடி திட்டுகிறீர்களே” என்று வாஜ்பாய் கேட்க, “ஆமாம். நீங்கள் அவ்வாறு நடந்து கொள்வதால் அப்படிக் கூறுகிறேன்” என்றாராம் ஜோதிபாசு.

“ஈஸ்வர அல்லா தேரே நாம்” எனச் சகோதரத்துவம் போதித்த தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர்கள். காந்திஜி படுகொலையால் இந்திய நாடே கண்ணீர்க் கடலில் மிதந்தபோது மிட்டாய், மிலாய், இனிப்பு வழங்கி காந்திஜி மரணத்தைக் கொண்டாடியவர்கள். கொலையாளி கோட்சேக்கு கோவில் எழுப்பியவர்கள்; சிலை அமைத்தும் பாராட்டியவர்கள்.  400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துவிட்டு நியூட்டன் விதியுடன் ஒப்பிட்டு படுகொலையை நியாயப்படுத்தியவர்கள்.

இந்து முஸ்லிம் காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள். இந்துப் பெண்ணின் வயிற்றில் இஸ்லாமியனின் வாரிசா என்று குத்திக் கொன்று ஈட்டியில் ஏந்தி எரித்தவர்கள். இஸ்லாமியப் பெண்களை பாலியல் கொடூரத்துக் குள்ளாக்கி, அவர்களுடைய வயிறுகளில் இந்துக்களின் வாரிசுகளை ஜெனிக்கச் செய்யுங்கள் என்று இந்துமத வாலிபர்களுக்கு அழைப்பு விடுத்த சாத்வி ரிதம்பரா முதலான போலிச் சாமியார்கள். மாட்டு மாமிசம் சாப்பிடும் அனைவரையும் மைதானத்தில் நிறுத்தி தூக்கில் போட வேண்டும் என்று உளறுகிற சாத்வி சரஸ்வதி சாமியார்கள்.
ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் முதலானவர்கள் பாகிஸ்தானுக்கும் செல்லட்டும் என்று விஷம் கக்கியவர்கள்.

உலகப் புகழ்பெற்ற உசேன் ஓவியக் கூடத்தைச் சேதப்படுத்தி சின்னாபின்னமாக்கியவர்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி முதலான அறிஞர் பெருமக்களைச் சுட்டுக்கொன்றவர்கள். குஜராத் உனாவில் செத்துப் போன மாட்டின் தோலை உரித்தனர் என்பதற்காக ஏழு தலித் இளைஞர்களை காரில் கட்டிவைத்து கம்புகளாலும். கம்பிகளாலும் தாக்கி அதனை உலகறிய காட்சிப்படுத்தியவர்கள். பசுவின் பெயரால் உ.பி. தாத்ரியில் முகமது அக்லக் என்று முதியவர், ராஜஸ்தானில் பெஹ்லுகான் ஆகியோரை படுகொலை செய்தவர்கள். குரான் முழுதையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்த 15 வயது சிறுவன் ஜூனைத்தை ரயிலிலேயேகுத்திக் கொன்றவர்கள்.

குஜராத்தில் தேவாலயங்கள் தீக்கிரையாக்கியவர்கள், பைபிளை எரித்தவர்கள், கல்லறைகளைத் தகர்த்தவர்கள். ஜாம்புவாவிச் (ம.பி) கிறிஸ்துவ கன்னியகாஸ்திரிகளை பாலியல் பயங்கரத்திற்குள்ளாக்கியவர்கள். மழைவாழ் மக்கள் மத்தியில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உதவிய ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயின்சை மதமாற்றக் காரணம் கூறி உயிரோடு கொளுத்தியவர்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமாரை தேச விரோதி என்றும், பிரிவினைவாதி என்றும் துன்புறுத்தியவர்கள்.

தில்லி பல்கலைக்கழகத் தலைமைப் பேராசிரியை வேத குமாரியை அலுவலக அறையில் சிறை வைத்து பணயக் கைதிபோல் துன்புறுத்தியவர்கள் – ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற சுயமரியாதை மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய தீண்டாமை வெறியர்கள். பகுத்தறிவுத் தந்தை பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்றவர்கள். பினராயி விஜயன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவித்தவர்கள். இத்தகைய இழிமனிதர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லாமல் எவ்வாறு அழைப்பது? இதோ, இப்போது மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை குண்டுகளால் துளைத்து, ரத்த வெள்ளத்தில் வீழ்த்திவிட்டார்கள். எத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்பதோடு அவர்கள் எதற்காகக் கொல்லப்பட்டனர் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. பாசிசத்தின் பயங்கரமானதும் அபாயகரமானதுமான அறிகுறிகள் இவை.
-கே.ஏ.தேவராஜன்

Leave a Reply

You must be logged in to post a comment.