மக்களை மத ரீதியாக துண்டாடும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு எதிராக கருத்தியல் போராட்டம் நடத்தி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சோனியா காந்தி:
கவுரி படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், எந்த அச்சமுமின்றி சுதந்திரமாக தன்னுடைய கருத்துகளை எழுதுபவர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பகுத்தறிவுவாத சிந்தனையோடு சுதந்திரமான முறையில் கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்; மாற்றுச்சிந்தனை உடையவர்கள் இந்த நாட்டில் வாழ முடியாது என்று அச்சுறுத்தும் விதமாக இந்தக் கொலைகள் அரங்கேறுகின்றன, இது பொறுத்துக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம்” என்றும் லங்கேஷ் படுகொலையைக் கண்டித்துள்ளார்.

ராகுல் காந்தி:
பாஜக -ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழுத்தத்திற்கு உள்ளா க்கப்பட்டு, தாக்கப்பட்டு இறுதியில் கொலையும் செய்யப்படுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் இயற்கைக்கு எதிர்நிலையை கொண்டு வர பாஜக முயற்சி செய்வதாகவும் கூறியுள்ள அவர், கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை உடனடியாக பிடித்து தக்க தண்டனையை வழங்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்:
“கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது; இப்படுகொலை கடும் கண்டனத்துக்குரியது; இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி:
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது; இச்சம்ப வம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது; மிகவும் எச்சரிக்கை விடுக்க கூடியதும் ஆகும்; இந்த விவகாரத்தில் நீதியை விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்:
வலதுசாரி அமைப்புகளால் இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது; கொலை காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்வதேச பொதுமன்னிப்புச் சபை:
சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் இந்திய கிளையும்கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “கவுரி லங்கேஷ் படுகொலை, நாட்டில் கருத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை ஒலி; அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: