புதுதில்லி, செப்.6-
மத்திய அமைச்சரவையில் இருந்து அனந்த் குமார் ஹெக்டேவை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக, பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன் பதவியேற்றார். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், மருத்துவர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஜித் பட்டி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். இதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட அனந்த் குமார் ஹெக்டேவை, நீங்கள் அமைச்சரவையில் இணைத் திருப்பதன் மூலம் எங்களது பாதுகாப்பு உணர்வு சிதைந்துவிட்டது. ஹெக்டேவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதுடன், அவருக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலம், சிர்சியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களையும், ஊழியர்களையும் தாக்கியதாக ஹெக்டே மீது கடந்த ஜனவரி யில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: