=======மதுக்கூர் இராமலிங்கம்======
கப்பலோட்டிய தமிழன். செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்படுகிற வ.உ. சிதம்பரனார் பன்முகத் திறமை கொண்டவராக விளங்கியுள்ளார். தமிழக தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் வஉசியும் ஒருவர்.

எனவேதான் பேராசிரியர் நா.வானமாமலை இவரை தமிழக முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி என்று அழைக்கிறார். இந்த தலைப்பில் நா.வா நூல் ஒன்றையும்எழுதியுள்ளார்.

தன்னுடைய சுயசரிதையை மகாகவி பாரதியார் கவிதை நடையில் எழுதியுள்ளார்.
எனினும் அது முற்றுப் பெறவில்லை. ஆனால் வஉசி தன்னுடைய வாழ்க்கை வரலாறை கவிதை நடையில் முழுமையாக எழுதியுள்ளார். அவர் சிறையிலிருந்தபோது மிச்சேல் என்ற சிறை அதிகாரி அவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் அதற்கு தாம் இவ்வாறு பதிலளித்ததாகவும் வஉசி எழுதியுள்ளார்.

“நீயோ புத்தி நிகழ்த்துகின்றவன்?
வாயை மூடடா மதியிலி உனக்கும்
உன்னப் பனுக்கும் உன்சூப் பிரண்டெண்டு
உன்னையாள் கவர்னர் மன்னா தியர்க்கும்
புத்திகள் கூறும் பெற்றிமை யுடையேன்’
என்று பல பகர்ந்தேன்…”

தூத்துக்குடியில் வழக்குரைஞராக பணியாற்றிய காலத்தில் தொழிலாளர் உரிமை தொடர்புடைய பல வழக்குகளை இலவசமாக வஉசி நடத்தியதோடு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டி சங்கம் அமைக்கும் பணியையும் செய்துள்ளார். சராசரி காங்கிரஸ்காரர்கள் போல் அல்லாமல் தொழிற்சங்க தலைவராகவும் இவர் உருவானதால்தான் ஆங்கிலேய அரசுக்கு இவர்மீது ஆத்திரம் அதிகமாகி,இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வஉசியும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தூத்துக்குடியில் பிரம்மாண்டமான வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற முதல் வேலைநிறுத்தம் என்று வரலாறு இதை பதிவு செய்துள்ளது. வஉசி திருக்குறள் மற்றும் சிவஞானபோதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி
யுள்ளார். திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலில் பதிப்
பித்தவரும் இவரே. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணார் எழுதிய உரையையும் வஉசி பதிப்பித்துள்ளார்.

மெய்யறிவு, மெய்யறம் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் உள்ளிட்ட நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை ஆகும்.

வஉசி சிறையில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருநாள் சிறைக்
காவலர் வந்து வஉசிக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று கூறியபோது
அவரிடம்மகிழ்ச்சி வெளிப்பட வில்லையாம். இது குறித்து சிறைக்காவலர் கேட்ட
போது, எனக்குத் தானே விடுதலை.

என் தேசத்திற்கு இல்லையே என்றாராம்.சுதேசி கப்பலோட்டி அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனலை மூட்டினர் வஉசி, சிவா, பாரதி போன்ற தலைவர்கள். ஆனால் விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காரணத்தால் தேசத்தை விலைபேசி விற்கத் துடிக்கின்றனர். வஉசி முன்னெடுத்த தேசபக்தியை சுடர்
விடச் செய்வதே அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

இன்று வஉசி பிறந்தநாள் (செப்டம்பர் 5, 1872)

Leave A Reply