கோரக்பூர் ஆஸ்பத்திரியில் இப்போதும் குழந்தைகள் இறப்பது நிற்கவில்லை. அடுத்து அதே உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஃபருக்காபாத்தில் அதே போன்று குழந்தைகள் கொத்து கொத்தாக இறந்திருக்கின்றனர். கடந்த வாரத்தில் 49 குழந்தைகள் இறந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஆஸ்பத்தியில் 52 குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன.

மொத்தம் மொத்தமாக குழந்தைகள் இறந்துபோவதுதான் செய்திகளாகின்றன. வெளியே தெரிகின்றன. ஒன்று இரண்டு என தொடர்ந்து குழந்தைகள் இறப்பது வெளியே தெரிவதில்லை. அவை வழக்கமாகிக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரும் அவலம் இது.

இப்படி தங்கள் குழந்தைகளை இழந்து நிற்பவர்கள் பெரும்பாலும் வசதியற்ற, கிராமப்புற எளிய மக்களாகவே இருக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைவும், மருத்துவ மனைகளில் போதிய வசதிகள் இல்லாததும் இந்த துயரத்திற்கு முக்கிய காராணங்களாய் இருக்கின்றன.

இந்திய நாட்டின் மொத்த உற்பத்தியில் பொது சுகாதாரத்திற்காக மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் தொகை வெறும் 1.69 சதவீதமே. இதில் மத்திய அரசின் பங்கு 1 சதவீதம் மட்டுமே. உலக நாடுகளோடு ஒப்பீட்டு அளவில் இது மிகக் குறைவானதாகும். 125 கோடி பேர் கொண்ட இந்தியாவில், தன் தேசத்து மக்கள் நலமுடன் இருப்பதில் மோடியின் பிஜேபி அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இதுதான் அளவுகோல்.

இந்த நிலைமை நீடித்தால், இந்தியாவில் இப்படிப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 2021-ல் மேலும் 42 சதவீதம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

மோடி எந்த ‘வளர்ச்சி’ குறித்து பேசுகிறார் என்பதை புரிந்துகொண்டு விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

Mathava Raj

Leave A Reply