திருப்பூர், செப்.5 –
மங்கலம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் செவ்வாயன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே வடுகபாளைத்தியம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளஞ் செட்டிபாளையம், செம்மாண்டாம்பாளையம், மங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் செவ்வாயன்று காலை மங்கலம்-அவினாசி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பி.முத்துசாமி, முருகன், கணியாம்பூண்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் செட்டி காளியப்பன் உள்ளிட்டோர் காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். டாஸ்மாக் அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடையை இடம் மாற்றிக்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave A Reply

%d bloggers like this: