வன்புணர்வுக்குற்றங்களுக்காக போலி சாமியார் குர்மீத் சிங் தண்டனைக்கு உள்ளானதும் அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா மற்றும் பல இடங்களில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதும் பாஜகவிற்கும் மற்றும் இவர் போன்ற போலி சாமியார்களுக்கும் இடையேயான அரசியல் கள்ளப்பிணைப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

2014 சட்டமன்றத் தேர்தலின்போது தன்னுடைய ஆதரவாளர்களை பாஜகவிற்கு வாக்களிக்குமாறு தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான போலி சாமியார் குர்மீத் சிங் கேட்டுக்கொண்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பாஜகவும் குர்மீத் சிங்கிற்கும், தேரா அமைப்புக்கும் அனைத்து வகைகளிலும் மிகவும் தாராளமானவிதத்தில் உதவிகளைச் செய்து வந்தன.  வெற்றி பெற்ற 47 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் அவரைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். தேரா  அமைப்பின் செயல்பாடுகளுக்காக கட்டார் அரசாங்கத்தின் இரு அமைச்சர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து பணம் கொடுத் திருக்கின்றனர். பிரதமர் மோடியும் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது போலி சாமியாரை ஓகோ என்று புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

போலி சாமியாருடனான இத்தகைய கள்ளப்பிணைப்புதான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று நீதிமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான தேரா ஆதரவாளர்கள் திரள்வதற்கு மிகவும் வெட்கங்கெட்ட முறையில் கட்டார் அரசாங்கத்திற்கு அனுமதி அளித்திட வழி வகுத்தது. அவர்கள் அவ்வாறு கூடுவதைத் தடுக்கக்கூடிய விதத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்திட மறுப்பதற்கும் இட்டுச் சென்றது.

இவ்வாறு கட்டார் அரசாங்கம் தன் கடமையிலிருந்து தவறியதன் காரணமாக, 38 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மிகப்பெரிய அளவில் அரசாங்கம் மற்றும் தனியார் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த போலி சாமியாருக்கு பாஜக கட்சியே முழுமையாக ஆதரவு அளித்து வருவதால், இவ்வளவு நாசகர விளைவுகள் நடந்தபின்னரும்கூட கட்டாரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு கோருவதற்கு பாஜக கேட்கவில்லை.

எனினும்கூட, குர்மீத் சிங் தொடர்பு என்பது தனிப்பட்ட ஒரு நிகழ்வு கிடையாது. இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி கூட இந்தப் பேர்வழியுடைய ஆதரவினைக் கோரியிருந்தது என்பதும் உண்மையாகும். ஆனாலும் கூட பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள்தான் இத்தகைய போலி சாமியார்களுடன் ஸ்தாபனரீதியான ஒரு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. நாடு முழுதும் உள்ள இதுபோன்ற போலி சாமியார்கள் ஏராளமானவர்கள் பாஜகவுடனும்  ஆர்எஸ்எஸ்-உடனும் தங்கள் பிணைப்பினை வலுப்படுத்திக் கொண்டு, தங்கள் சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்கிக் கொண்டுள்ளனர்.

இதேபோன்று மற்றுமொரு போலி சாமியார் ஆசாரம் பாபு என்பவர். குஜராத்தில் பாஜகவின் ஆதரவுடன் நன்கு செழித்து வளர்ந்துள்ளார். முதலில் தன் ஆசிரமத்தை குஜராத்தில் நிறுவி பின்னர் அதனை நாடு முழுதும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நபரும் பாஜகவின் தீவிர ஆதரவாளராவார். இப்போது அவர் 2013ஆம் ஆண்டிலிருந்து சிறையிலிருந்து வருகிறார்.  அவர் தன் மகனுடன் வன்புணர்வுக் குற்றங்களுக்கான வழக்குகளை எதிர்கொண்டு சிறையிலிருந்து வருகிறார்கள்.

பாஜகவின் ஆட்சியில் தங்கள் வாழ்க்கையை மேலும் மிகப்பெரிய அளவில் வளமாக்கிக்கொண்டுள்ள மற்றுமிரு போலி சாமியார்கள், ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவர்களாவார்கள். ராம்தேவைப் பொறுத்தவரை இன்று அவர் ஒரு மிகப்பெரிய வர்த்தகப்புள்ளியாவார்.  இந்த நபருக்கு பாஜக ஆகும் மாநில அரசாங்கங்களும், சில காங்கிரஸ் அரசாங்கங்களும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவருடைய ஆசிரமங்களுக்காகவும், யோகா நிலையங்களுக்காகவும், பதஞ்சலி உற்பத்திப் பொருட்களுக்காகவும் உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் அள்ளித் தந்திருக்கின்றன. அவருடைய பதஞ்சலி நிறுவனம் அழகுசாதனப் பொருட்களும், இதர பொருள்களும் 2016-17இல் சுமார் 10,561 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஆள் நரேந்திர மோடியின் அதிதீவிர ஆதரவாளராவார். தன்னுடைய மதப்பிரச்சாரக் கூட்டங்களில் இந்துத்துவா வெறியை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்.

இத்தகைய போலி சாமியார்களின் செயல்பாடுகள் சமூகத்திற்கு எந்த அளவிற்கு தீங்கு பயக்கக்கூடியவை என்பதை ரவிசங்கர் 2016 மார்ச்சில் யமுனை ஆற்றங்கரையினில் நடத்திய உலகக் கலாச்சார விழாவைத் தன்னுடைய வாழும் கலை பவுண்டேசன் சார்பில் நடத்தியதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இவர் நடத்திய விழாவின் காரணமாக இங்கே சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளானதையும், இதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததையும் பார்த்தோம். ரவி சங்கர் இந்த அபராதத்தொகையைக் கட்டமறுத்ததுமட்டுமல்ல, மாறாக தீர்ப்பாயத்திற்குத்தான் அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவித்தார். அரசாங்கத்திற்குத் தான் அளித்துவரும் ஆதரவினால் தனக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பது ரவிசங்கருக்கு நன்கு தெரியும்.  நரேந்திர மோடியே அந்த நிகழ்வுக்குச் சென்று ரவிசங்கரை வாழ்த்தியதையும் பார்த்தோம்.

தென்னிந்தியாவில், கோயம்பத்தூரில் ஜக்கி வாசுதேவ் என்ற சாமியார் இஷா பவுண்டேசன் சார்பில் ஓர் ஆசிரிமத்தை அமைத்திருக்கிறார். இதற்காக இந்தப் பேர்வழி சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார். இந்த நிலங்களை மீட்பதற்காக போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், விரைவிலேயே, இந்த இடத்தில் மாபெரும் ஆதியோகி சிலையைத் திறந்த வைப்பதற்காக பிரதமர் மோடி வந்தார். இதேபோன்று மற்றுமொரு நபர் அமுர்தானந்தமாயி என்பவராவார். இவரும் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார். இதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழு ஆதரவும் உண்டு.

இவ்வாறு பாஜக அரசாங்கங்களும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் இத்தகைய போலி சாமியார்களுக்கு ஆதரவு அளித்துவருவதன் காரணமாக, இந்தப் பேர்வழிகள் மதஞ்சார்ந்த பிரச்சாரங்களைக்கூட தங்களுடைய வர்த்தக நலன்களுடன்  இணைத்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.  இவர்களுக்கு ஆட்சியாளர்களின் அரவணைப்பு முழுமையாகக் கிடைத்து வருவதால், இவர்கள் தங்களை சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் என்று கருதிக்கொண்டு அவ்வாறு செயல்பட்டும் வருகிறார்கள்.

போலிசாமியார்களின் ஆட்டபாட்டங்கள் இவ்வளவு இழிவானவைகளாக இருந்தபோதிலும், இவற்றையெல்லாம் மீறி, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான குர்மீத் சிங், பெற்றுள்ள தண்டனையானது, பாஜகவிற்கும் இத்தகைய போலி சாமியார்களுக்கும் இடையேயான நயவஞ்சகமான  கள்ளப்பிணைப்பை நன்கு தோலுரித்துக் காட்டிவிட்டது.

(ஆகஸ்ட் 30, 2017)

(தமிழில்: ச.வீரமணி)

Leave A Reply

%d bloggers like this: