திருப்பூர், செப்.5-
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சிக்கண்ணா மற்றும் உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் கல்லூரி திறந்த நிலையில்,செவ்வாயன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் காலை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதேபோல், அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி உடுமலையில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: