நீட் தேர்வை தமிழகத்தில் எதிர்க்கும் இடதுசாரிகள் ஏன் கேரளாவில் ஆதரிக்கின்றனர் என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் இரு புள்ளிகளிலிருந்து எழுகின்றன. ஒன்று கல்வி உரிமையை மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்வது சரியல்ல என்று எழுப்பப்படுகிறது. இரண்டாவது உயர்நிலைக் கல்வியில் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வை சந்திக்கும் நிலைமையில் மாணவர்கள் இருக்கிறார்களா இல்லையா என அறிந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எழுப்புவதாகும்.

மாநில உரிமை குறித்து கவலைப்படும் கட்சிகளின் நிலைபாடுகள் அரசியல் ரீதியாக எடுக்கின்றன.

வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என மக்களிடமிருந்து எழும்பும் எதிர்ப்புகளிலிருந்து மாநில அரசுகள் தங்கள் நிலைபாடுகள் எடுக்கின்றன.

கல்விக்கான வசதிகளை, ஏற்பாடுகளை செய்திருப்பதில் கேரள அரசு எப்போதும் முன்னிற்கிறது. நீட் தேர்வு அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை. அங்கு மக்களிடம் எதிர்ப்பும் கிளம்பவில்லை. அதை நீட் தேர்வின் முடிவுகள் இருந்து புரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு எழுதிய கேரள மாணவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்றிருக்கின்றனர். 65447 மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். 52208 மாணவர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர்.

தமிழ்நாடு அப்படியில்லை. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39 சதவீதத்தினரே தகுதி பெற முடிந்திருக்கிறது.

இந்த முரண்பாடுதான் நிலவும் சூழலை தெளிவாக்கக் கூடியது. வாய்ப்புகளும் வசதிகளும் சமத்துவமற்று இருக்கும்போது, முடிவுகளும் சமத்துவமற்றுதான் இருக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வாய்ப்பையும் வசதியையும் அனைத்து மாணவர்களும் ஒன்றுபோல் பெற்றிராத நிலைமையில், அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மக்களின் மனநிலையிலிருந்து தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக் கேட்கிறது.

அதன்பொருட்டு, கல்வி உரிமையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதை தமிழகம் எதிர்க்கிறது.

நீட் தேர்வை தங்கள் மாநில மாணவர்கள் எதிர்கொள்ள முடிந்திருப்பதால் கேரளா அரசு அதை அனுமதிக்கிறது. (இதைத்தான் ஆதரிப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.)

அதே வேளையில், தமிழக மாணவர்கள் அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை அறிந்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கும் கேரள இடதுசாரிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தே வருகின்றனர்.

கல்வி உரிமையை மாநிலப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதை அரசியல் ரீதியாக இடதுசாரிக் கட்சிகள் ஒருமித்த குரலில் எதிர்த்தே வருகின்றன.

இந்த சூழலையும், பின்னணியையும் புரிந்துகொண்டால், நீட் தேர்வு குறித்து இடதுசாரிகளின் பார்வையும் நிலைபாடும் பிடிபடும்.

Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: