பெரியசாமி மாதிரி கணக்குப் போட முடியாது. கரும்பலகையில் ஆசிரியர் கணக்குக் கேள்வியை எழுதி முடித்த சில நிமிடங்களுக்குள் விடையுடன் எழுந்து நிற்பான். நாங்கள் திணறிக் கொண்டிருப்போம். இது நான் படித்த புனித சவேரியார் ஆர் சி நடுநிலைப் பள்ளியில். ஊர்: கல்லக்குடி

ஐந்தாவது முடித்தவுடன் நான் திருச்சிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு வருடம் கழித்து கல்லக்குடிக்குச் சென்றபோது பெரியசாமியைப் பார்த்தேன். பனியன், காக்கி டிரவுசர் அணிந்து கையில் பித்தளைத் தூக்கில் சாப்பாட்டுடன். டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் தினக்கூலி ஊழியனாக. என்னைப் பார்த்தவுடன் சிறிய புன்னகையுடன் வேகமாகக் கடந்து சென்று விட்டான்.
தர்மராஜ் மாதிரி தமிழ் படிக்க முடியாது. எழுத்தும் முத்து முத்தாக. இரண்டு வருடத்திற்குப் பிறகு கையி சுத்தியலுடன் குவாரியில் கல்லுடைக்கச் சென்று கொண்டிருந்தான்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது முன் பல் இல்லாத தமிழரசிதான் வகுப்பில் தமிழரசி.
அவள் நான்கு நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. என்னடா ஆச்சு அவளுக்கு என்று ஆசிரியர் கேட்க மாணவர்கள் கோரசாக தமிழரசி செத்துப் போச்சு டீச்சர் என்றனர்.
திருச்சியில் ஏழாவது படிக்கும்போது எப்போதும்
கிழிந்த சட்டை அணிந்து வரும் ராஜமாணிக்கத்தைப் பன்னி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். ஏதோ பட்டப் பெயர் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் என் வீட்டுக்கருகில் ஒரே களேபரம். பன்றிகள் அங்குமிங்கும் ஓட அவற்றின் பின்னே நுனியில் வளையம் பொருத்திய நீண்ட கழியுடன் ஓடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நடுவே ராஜமாணிக்கமும். பெயர்க் காரணம் புரிந்தது. அடுத்த வருடத்திலிருந்து அவன் பள்ளிக்கு வரவில்லை.
இதுதாண்டா மெரிட்டு என்று நான் எழுதும்போது
பெரியசாமி, தர்மராஜ், தமிழரசி, ராஜமாணிக்கம் என்று இவர்களின் முகங்கள்தாம் என் முன் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

  • Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: