பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் விஷம் கலந்தவரை காவலர்கள் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 640 கி.மீ., தூரத்தில் இருக்கிறது சன்னூர் கிராமம். இந்த கிராமத்தில் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 7 கிணறுகள் உள்ளது. இதில் கிராம எல்லையில் இருந்து 200 மீ., தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் தான் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதுவும் கிணற்றில் இருந்து பம்ப்செட் அமைக்கப்பட்டு தலித் மக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றின் அருகே அமைந்திருக்கும் விவசாய நிலம் தலித் ஒருவரும் சொந்தமானது. ஆனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இந்த நிலம் வேறு சமூகத்தை சேர்ந்த கோலப்பகோடா என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அன்று முதலே தலித் மக்கள் அந்த கிணற்றில் இருந்த நீர் எடுக்க கூடாது என்பதற்காக பல விதமான விரோத செயல்களில் கோலப்பகோடா ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் பம்ப் செட்டில் தண்ணீர் வரவில்லை என்பதால் தலித் சமூகத்தை சேர்ந்த மகந்தப்பா என்பவர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நேரடியாக கிணற்றில் இருந்துதண்ணீர் எடுக்கும்போது, கிணற்றில் இருந்து ஒரு விதமாக துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். இதையடுத்து அவரது பகுதியை சேர்ந்தவர்களிடம் கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, கிணற்று தண்ணீர் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் கிணற்று நீரில் எண்டோசல்பான் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து குல்பர்கா  துணை கண்காணிப்பாளர் ஹல்லூர் கூறுகையில், தண்ணீரில் என்டோசல்பான் கலக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த 3 நாட்களில் இரண்டு முறை கிணற்று நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜீவர்கி தாசில்தார் எல்லப்ப சுபேதார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளார். தலித் மக்களுக்கு என்றிருந்த ஒரே ஒரு கிணற்றில் விஷம் கலந்துள்ள போதிலும் மற்ற கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க மற்ற சாதியினர் அனுமதிக்க மறுக்கின்றனர் என்றார்.

இது குறித்து தலித் மக்கள் கூறுகையில், கிணற்றிற்கு அருகில் உள்ள நிலத்தை குத்தகை எடுத்துள்ள கோலப்பகோடா இறந்த நாய், பூனை, பாம்பு போன்றவற்றை கிணற்றில் வீசி எங்களை தண்ணீர் எடுக்கவிடாமல் செய்வார். ஒவ்வொரு முறையும் நாங்கள் கிணற்றை சுத்தம் செய்து பின்னர் தண்ணீர் எடுப்போம். அவர் பலமுறை எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கூறினர்.

இதைத் தொடர்ந்து கோலப்பகோடா-வை கைது செய்த காவலர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Leave A Reply

%d bloggers like this: