ஜெய்ப்பூர்;
கழுதையை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில், ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரக் கூட்டம், அப்பாவி பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பர்மெரில் கழுதையை ஏற்றிச் சென்றவர்களை பசு குண்டர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஜாலோர் மாவட்டம் சைலா நகரைச் சேர்ந்த காந்திலால் பகீல் என்பவர் தன்னுடைய கழுதையைக் காணவில்லை என செப்டம்பர் 2-ஆம் தேதி போலீசில் புகார் கொடுத்து உள்ளார். பின்னர் அவரும் தன்னுடைய கழுதையை வலைவீசி தேடிவந்து உள்ளார். அப்போது கலூதி என்ற இடத்தில் கழுதையை கண்டுபிடித்து உள்ளார்.

உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்துவிட்டு நண்பர்களுடன் எஸ்யுவி-யில் கழுதையை ஏற்றிச் சென்றுள்ளார்.ஆனால், பசுவைத்தான் கொண்டு செல்வதாக நினைத்து, அவர்களைப் பசு குண்டர்கள் காரில் துரத்தியுள்ளனர். குறிப்பிட்ட தூரம் சென்றதும், காந்திலால் பகீலின் வாகனத்தை மறித்து, அதிலிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் காருக்குள் பார்த்தபோது, அங்கு கழுதை நின்றுள்ளது.

இதையடுத்து பசு குண்டர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியுள்ளனர்.பசு குண்டர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply