நவம்பர் புரட்சி குறித்த செய்திகள் இந்தியாவில் இந்திய தேசியக் காங்கிரசிலும், புரட்சிக் குழுக்களிலும் செயல்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் மகத்தான தாக்கத்தினை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகளின் செயல்களால் அதிருப்தி அடைந்திருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், சி.ஆர். தாஸ் போன்று புரட்சிகர எண்ணம் கொண்டவர்கள் (radical wing) ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி வெற்றி பெற்றதை வரவேற்று, தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் முன் வந்தார்கள். ரஷ்யப் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் உருவாக்கத் தொடங்கின. 1918க்கு முன், தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தீவிரமான முறையில் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எப்போதாவதுதான் வேலைநிறுத்தங்கள் நடைபெறும். 1918இல் உருவான தொழிலாளர் வர்க்க இயக்கம் அணி அணியாகத் தொழிலாளர் வர்க்க இயக்கங்களை கண்டது. 1919க்கும் 1921க்கும் இடையில் நடைபெற்ற எண்ணற்ற வேலைநிறுத்தங்கள் நாட்டையே குலுக்கின.

ஆப்கானிஸ்தான் வழியே ரஷ்யா செல்வதற்காகஅமைக்கப்பட்ட முஜாஹிர் குழுக்கள் ரஷ்யப் புரட்சியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டன. இவர்கள் அனைவரும் விடுதலைப் போராட்ட வீரர்கள், கிலாபத் இயக்கத்தின் வெளிப்பாட்டால் அதிருப்தி அடைந்திருந்தவர்கள். இவர்களில் சிலர் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினார்கள்.

சுப்பிரமணிய பாரதியார், காஜி நஸ்ருல் இஸ்லாம், ரவீந்திரநாத் தாகூர் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் ரஷ்யப் புரட்சியைப் புகழ்ந்த கவிதைகள் இயற்றினார்கள். கட்டுரைகள் எழுதினார்கள். பாரதியார், அக்டோபர் புரட்சிக்கு ஒருசில வாரங்களுக்குப்பின் “புதிய ருஷ்யா” என்ற பாடலை எழுதினார். ரவீந்திரநாத் தாகூர் 1930இல் ரஷ்யாவிற்குச் சென்றார். புதிய சமூகம் அங்கே கட்டி எழுப்பப்பட்டிருந்ததைப் பார்த்து, மிகவும் மகிழ்ந்து, “ருஷ்யாவிலிருந்து கடிதங்கள்” எழுதினார்.

“இங்கே உருவாகியுள்ள சமுதாயத்தை என் சொந்தக் கண்களால் பார்க்காமல்மட்டும் நான் இருந்திருந்தால், இங்கே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நிச்சயமாக நான் நம்பி இருக்க மாட்டேன், பத்தாண்டுகளுக்குள் எவ்வளவு முன்னேற்றங்கள்? பல்லாயிரக்கணக்கான மக்கள் அறியாமை என்னும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். தாங்கள் இதுநாள்வரை மிகவும் தாழ்ந்த நிலையில் அமுக்கி வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்துகொண்டுவிட்டார்கள், எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணியமானமுறையில் வாழ்வதற்கும் கற்றுக்கொண்டுள்ளார்கள். குறிப்பாக கல்வி அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை உணர நாம் இங்கே வரவேண்டியது அவசியமாகும்.” என்று அந்தக் கடிதங்களில் அவர் எழுதியிருக்கிறார்.

1930களில் சோவியத் யூனியனுக்குச் சென்ற ஜவஹர்லால் நேருவிலிருந்து, தந்தை பெரியார் வரை சோசலிஸ்ட் சோவியத் யூனியன் அடைந்துள்ள அளப்பரிய முன்னேற்றங்களையும் சாதனைகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பரிசோதனையில் வெற்றி  
பகத்சிங் வாழ்த்து
பகத்சிங்கும் அவரது தோழர்களும் ரஷ்யப் புரட்சியாலும் லெனினது போதனைகளாலும் உத்வேகம் பெற்று சோசலிசத்தைத் தழுவினார்கள்.

1930 ஜனவரி 21 அன்று பகத்சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது, கீழ்க்கண்ட தந்தியை அவர்கள் மாஸ்கோவிற்கு அனுப்பினார்கள்:“லெனின் தினமான இன்று, மாமேதை லெனினது சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரஷ்யா மேற்கொண்டுள்ள மாபெரும் பரிசோதனையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் எங்களையும் நாங்கள் இணைத்துக் கொள்கிறோம்,” என்று அந்த தந்தி வாசகங்கள் அமைந்திருக்கும், 

இவ்வாறு நம் நாட்டில் சுதந்திரத்திற்கான போராட்டமும், சமூக விடுதலைக்கான போராட்டமும் ரஷ்யப் புரட்சியால் மிகுந்த செல்வாக்கிற்கு உள்ளாயின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: