ஈரோடு, செப்.4-
கோபிச்செட்டிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்க உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணியகாரன்பாளையம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஊர் பகுதிக்கு அருகில் உள்ள கரட்டுப்பாளையம் ரோட்டிற்கு அடுக்கில் விஐபி முத்துநகர் என்ற இடத்தில் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் பொது மக்களுக்கும், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இக்கடையை அமைக்க இடம் வழங்கக்கூடாது என அவ்விடத்தின் உரிமையாளரிடம், ஊர் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால், இவர்களை இடத்தின் உரிமையாளர் மிகவும் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். இல்லையென்றால் குடும்ப அட்டைகளை திரும்ப தருவகாக கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரனிடம் ஊர் பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இதேபோல, ஈரோடு பெரிய அக்ரஹார பகுதியில் இயங்கி வந்த மதுக்கடையை நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. தற்போது, மதுக்கடையை திறப்பதற்கான முயற்சிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இக்கடையை திறப்பதற்கான அனுமதி வழங்கக் கூடாது. கடை திறப்பற்கான பணிகளை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: