அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஆர்எம்எஸ் என அழைக்கப்பட்ட ஆர்.முத்துசுந்தரம் கடந்த ஜூலை 29ம் தேதி காலமானார். அவரது உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (செப்.4) சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுச் சமூகத்துக்கு தனித்திறமைகளை அளித்தவர்
ஆர்எம்எஸ் உருவப்படத்தை சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் திறந்து வைத்து பேசுகையில், “தன்னுடைய தனித்திறமைகளை பொதுச்சமூகம், அரசு ஊழியர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆற்றலை, அவர் பணியாற்றிய அமைப்பு, பின்பற்றிய கொள்கைகளிலிருந்து பெற்றார். தமுஎகச போன்ற பிற அமைப்புகளிலும் பங்களிப்பு செலுத்தினார்’’ என்றார்.

ஒரு பிரச்சனைக்கு பின்னால் இருந்து இயக்குவது எத்தகைய சக்தி என்பதையும் கண்டுகொள்ளும் ஆற்றலை ஆர்எம்எஸ் கொண்டிருந்தார். இதனை தொழிற்சங்கத் தலைவர்கள் பின்பற்ற வேண்டும். நெருக்கடியான காலத்தில் தொழிற்சங்கம் இயக்கம் உள்ளது. இத்தகைய நிலைமைகளில் முத்துசுந்தரத்தின் நினைவுகள் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், “தொழிற்சங்க தலைவர் என்பதை தாண்டி கலை, கலாச்சாரம், பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றினார். மூடப்பழக்கங்கள், மக்களை பிளவுபடுத்தும் மதவெறி சதிகளை அம்பலப்படுத்துவது போன்ற வெகுஜன செயல்பாடுகளில் பணியாற்றிய மத்தியதர ஊழியர்களில் முதன்மையானவர் ஆர்எம்எஸ். கலைஇரவு மேடைகளில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஜெயலலிதா தன்னை ‘‘கிரேட்’’ என நிரூபிக்க முயற்சித்தபோது, அதற்கெதிராக வெஞ்சமர் புரிந்து அரசு ஊழியர்கள்தான் ‘‘கிரேட்டஸ்ட்’’ என நிறுவியவர் ஆர்எம்எஸ்.”  என்றார்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், “நெருக்கடியான நேரங்களில் தலைமை எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முத்துசுந்தரம்” என்றார்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், “1984ம் ஆண்டு அரசு ஊழியர் சங்கம் துவங்கியபோது அதன் செயலாளராக முத்துசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒருகட்டத்தில் சாதாரண உறுப்பினராக மாற்றப்பட்டார். பொறுமையும், சிகிப்புத்தன்மையும்மிக்க அவர், சோர்வின்றி உழைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளராக, சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக பரிணமித்தார். சமரசமற்ற பொதுவுடமைப் போராளியாக வாழ்ந்தார்” என்றார்.

வாழ்நாளெல்லாம் இயங்கியவர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முகமது, “பண்பாற்றல், சொல்லாற்றல், செயலாற்றல் கொண்டிருந்த ஆர்எம்எஸ், கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார், மறைந்தார். ஆர்எம்எஸ் உழைப்பால் வலுவடைந்த அரசுஊழியர் சங்கம், அவரின் லட்சியத்தியத்தை முன்னெடுத்துச்செல்லும்” என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், “ஆர்எம்எஸ் என்றால் அஞ்சல்துறையில் விரைவுதபால் என்று பொருள். அதுபோல வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டே இருந்தார் ஆர்எம்எஸ். அவரைப்போன்றே அவர் கட்டமைத்த அமைப்பு நதிபோல இயங்கும். அரசு ஊழியர்களின் நலன்களை காக்கும்” என்றார்.

இந்நிகழ்விற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மு.அன்பரசு வரவேற்றார். மாநில அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் ப்பி.அசோக்பாபு, எம். ஜானர்த்தனரெட்டி (ஆந்திரா), ஜி.தேவிபிரசாத் (தெலுங்கானா), மகாதேவய்யா மட்டபத்தி (கர்நாடகா), அசோக்தூல் (மகாராஷ்டிரா),
பத்திரிகையாளர் என்.சீனிவாசன், பேரர.வெங்கடேஷ் ஆத்ரேயா, தலைமைச்செயலக சங்க பொதுச்செயலாளர் வெங்கசேடன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் க.மீனாட்சிசுந்தரம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொருளாளர் எஸ்.ஜீவானந்தம், பேரா.மூட்டா ராஜூ, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் எம்.கிரிஜா, வங்கி ஊழியர் சங்க அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி, வாலிபர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.பாலா, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜேந்திரன், டிஆர்இயு தலைவர் இரா.இளங்கோவன், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டி.ரவீந்திரன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநிலப் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன், தீக்கதிர் பொறுப்பாளர் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தி.கலைசெல்வி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: