ஈரோடு,செப். 4-
வீரப்பன் சத்திரத்தில் இயங்கி வந்த சுகாதார நிலையத்தை சித்தோடு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீரப்பன் சத்திரம் பாரதி தியேட்டர் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சித்தோடு பகுதிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். மேலும் அவசர சிகிச்சைக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையையே நாட வேண்டியிருக்கும்.

ஆகவே, சுகாதார நிலையங்களை கூடுதல் வசதிகளை செய்து தரம் உயர்த்துவற்கு பதிலாக அடியோடு வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தவறான முடிவாகும். மேலும், ஈரோட்டில் டெங்கு உள்ளிட்ட பல மர்ம காய்ச்சல்கள் அதிகளவில் பரவி குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு போதியசுகாதாரவசதியை உறுதிபடுத்துவதற்குமாறாக, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. எனவே, வீரப்பன் சத்திரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை கைவிட்டு அப்பகுதியிலேயே தொடர்ந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுந்தரராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் நிர்வாகி அம்மணிம்மாள் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமானோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.