ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வழங்குவதற்காக வருவாய்த்துறை அதிகாரி ரூ.20,000 லஞ்சம் கேட்டதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த தலித் விவசாயிகள் இருவரும் தங்கள் உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒடுக்கப்பட்ட தலித் விவசாயிகளுக்கு நலத் திட்டத்தின் மூலம் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரீம்நகரை சேர்ந்த தலித் விவசாயிகள் ஸ்ரீநிவாஸ் (25), பரசுராமலூ (23) ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான பட்டாவை கேட்பதற்காக கிராம வருவாய் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது கிராம வருவாய்த் துறை அதிகாரி , நிலப் பட்டாவை கொடுக்க இருவரிடமும் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் அளிக்க , ஸ்ரீநிவாஸ், பரசுராமலூ ஆகிய இருவரும் அவர்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளை அழைத்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ரசமாய் பாலகிஷான் – னை பார்க்க அவரது அலுவலகத்திற்கு சென்றனர். காலை 10.00 மணி முதல் 3.30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் காத்திருந்தும் ரசமாய் பாலகிஷான் – னை சந்திக்க முடியது என அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஸ்ரீநிவாஸ் , பரசுராமலூ ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் பலத்த தீ காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகான்காளி சம்பத் என்பவர் கூறுகையில், ஸ்ரீநிவாஸ், பரசுராமலூ ஆகிய இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தில் மொத்தம் 34 பயனாளிகள் உள்ளனர். ஆனால் தகுதியில்லாத 6 பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
இது குறித்து மாநில நிதி அமைச்சர் எட்ல ராஜேந்திரன், கிராம வருவாய்த்துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டு நீருபனமானால், அவர் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: