இந்தியாவில் ஏழை, நடுத்தரமக்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு ஆகிய அத்தியாவசியப் பண்டங்கள் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியன வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பண்டங்கள் மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரிசி மட்டும் இலவசமாக குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு சரக்கு ரயில்கள் மூலம் வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்றவை அனைத்து மாவட்டங்க ளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உணவுப் பண்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இவ்வாறு தமிழகத்தில் மொத்தம் 375 நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த கிடங்குகளில் ஏறத்தாழ 12 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கிடங்குகளில் 214 நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமானவை. இடப்பற்றாக்குறை காரணமாக  தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மற்றும் மத்திய சேமிப்பு கிடங்குகளை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு 61 கிடங்குகள் உள்ளன

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தின் கீழ்  இடங்கு உள்ளது. ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் தாலுகாக்களிலும் நுகர்பொருள் வாணிபக்கழகக் கிடங்குகள் அமைந்துள்ளன. இந்த கிடங்குகளில் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற் றச்சாட்டு எழுந்துள்ளது.

கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மூட்டைகளை எலி, புழு, பூச்சிகள், வண்டுகளும் பாழாக்கி வருகின்றன. மறுபுறம் கிடங்குகளில் வென்டிலேட்டர் விசிறிகளும் சரியாக இயங்காததால்  அனலின் தாக்கம் அதிகரித்து மூட்டைகளில் உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் விரைவில் மக்கிப்போகின்றன.

இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க வேலூர் மாவட்டத்தலைவர் எல். சி. மணி கூறியதாவது:-
“கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோதுமை அதிகமாக  விளையும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், விளைவித்த கோதுமை மணிகளை பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் இன்றிதிறந்த வெளிகளில் வைத்ததால் மழை, வெய்யிலில் நாசமடைந்தன. மேலும் கிடங்குகளில் வைக்கப்பட்ட  கோதுமை எலி, கரப்பான் பூச்சிகளால் நாசமான பிரச்சனை, பொது நலவழக்குக்காக நீதிமன்றம் சென்றது. அதற்கு நீதிபதி கடுமையாக கண்டித்து வீணாகும், கோதுமையை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டார். அதற்கு அப்போதைய உணவு அமைச்சர், நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டாம் என பதிலளித்தார்.  உணவுப் பாதுகாப்பு கொள்கைகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் கிடையாது.இதே நிலைதான் இன்றும் மத்திய பாஜக ஆட்சியும் தமிழக அதிமுகவும் ஒத்த கொள்கை முடிவு எடுத்து செயல்பட்டுவருகின்றன. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது , மத்திய  அரசின் நிர்ப்பந்தங்களை எதிர்த்துவந்தார். இன்று அது பழங்கதையாகிவிட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டின் முடிவின் படி, விவசாயிகள் படும் அவதிகளையும், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வரும் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து, மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என மாவட்ட விவசாயிகள் சங்கம் தீர்மானித்து ள்ளது” எனக் கூறினார் மணி.

பொது விநியோகத்திட்டத்தை அழிக்கும் நோக்கோடு செயல்பட்டுவரும், மத்திய  மோடி அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும், விதை பொருட்கள், உரம், மற்றும் விவசாயிகள் விளை உற்பத்தி பொருட்களை முறையாக வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தத்  தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரும்பாலான கிடங்குகளில் மூட்டைகளை வைக்கப் போதிய இடவசதி இல்லாமல், மூட்டைகளை வராண்டா, காலி மைதானங்களில் அடுக்கி தார்ப்பாய் போட்டு மூடி வைக்க வேண் டிய நிலை உள்ளதாகவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர். அதோடு மாவட்டத்தில் அனைத்து உணவுக் கிடங்குகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல் பாழடைந்து வருகின்றன.

வேலூர் தொரப்பாடி கிடங்குகளின் இரும்பு ஷட்டர்கள் துருப்பிடித்தும், வெண்டி லேட்டர் கண்ணாடிகள் நொறுங்கியும், பேன்கள் இயங்காமலும், கட்டட சுவர்கள் விரிசல் கண்டும் மோசமான நிலையில் காட்சி அளித்துக்கொண்டுள்ளன.  மாவட்டத்தில் உள்ள பிற கிடங்குகளின் நிலையும் பரிதாபகர மாகவே காட்சி அளிப்பதாக கூறுகின்றனர் சுமைதூக்கும் தொழிலாளர்கள்.

இத்தகைய கிடங்குக ளின் நிலையாலும், எலி, புழு, பூச்சிகளின் தாக்குதலாலும் உணவுப் பண்ட மூட்டைகள் மக்கியோ அல்லது கிழிந்தோ அவை வீணாகிறது. அவ்வாறு வீணாகும் அரிசி, சர்க்கரை, கோதுமையை அங்குள்ள தொழிலாளர்கள் அப்படியே கல், மண், தூசு, குப்பைகளுடன் அள்ளி அதே மூட்டையில் போட்டுத் தைக்கின்றனர். இதனால் உணவுப் பண்டங்களின் தரம் குறைந்த நிலையிலேயே மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது ஒரு புறம் என்றால் கிடங்குகளில் அடுக்கப்படும் மூட்டைகளில் ஓட்டை போட்டு திருடுகிற கும்பல்களின் அட்டகாசமும்  அதிகரித்து வருவ தாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் அதை செய்வதே தேவையற்ற வேலையாக கருதும் போக்கு நீடித்து வருகிறது. அவ்வப்போது ஆய்வு நடத்தி கிடங்குகளை  பராமரித்தால் உணவு பண்டங்கள் தரம் குறையாமல் மக்களைச் சேரும். அதோடு கிடங்குகளில் நடைபெறும் முறைகேடும் நடப்பதற்கு வழியின்றி போகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே நுகர் பொருள் வாணிப கிடங்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உணவு பொருட்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் தொரப்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் ஜி4/1-4 எண் கொண்ட கிடங்கு 2015 ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ம் தேதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், காலி கோணிப் பைகள், அம்மா சிமென்ட் மூட்டைகள், பழைய ஆவணங்கள், பைல்கள், ஊட்டி தேயிலை பாக்கெட் குவியல்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. இந்த விபத்துக்கு மின்கசிவு  காரணம் என்று கூறி மறைக்கப்பட்டது.
அதோடு தீ விபத்தில் நெல் மூட்டைகள் 3 ஆயிரத்து 170 ம், கோணிப்பை 31 ஆயிரத்து 650ம், நல்ல கோணிப்பை 6 ஆயிரம், பிளாஸ்டிக்கோணிப்பை 6 ஆயிரத்து 748ம், ரேஷன் கடை கோணிப்பை 12 ஆயிரத்து 650 ம், சிமென்ட் 93 மூட்டைகள், டீத்தூள் 440 மூட்டைகள், உப்பு ஆயிரம் கிலோ, காஸ் ஸ்டவ் 29, ரப்பர் டியூப் 100, எடை தராசு 20, பாதுகாப்பு வளையம் 30, பழைய பதிவேடுகள் ஆயிரத்து 500 என மொத்தம் ரூ 27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கணக்கு காட்டப்பட்டது. இந்த விஷயத்தில் குடோனில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை ஈடுகட்டுவதற்கான ஒரு நாடகமே தீ விபத்து என்ற விமர்சனமும்  உண்டு.   சிவகங்கை சிவில் சப்ளை கிடங்கிலும் சரக்கு இருப்பில் பெரும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது நினைவுகூரத் தக்கது. இனியேனும் முறையான விசாரணை, சிரியான தடுப்பு நடவடிக்கை என மேற்கொள்ளப்படா விட்டால் உன்மைகள் சாம்பலாகும் என்பதோடு எளிய மக்களுக்கான உணவும் கொள்ளைபோய் கொண்டே இருக்கும்.
  –    கே.ஹென்றி.    

Leave A Reply

%d bloggers like this: