ஈரோடு, செப். 4-
சத்துணவு பணியை ஏமாற்றி வேறு ஒருவருக்கு வழங்கியதால், பெண் குடும்பத்துடன் ஆட்சியர் ஆலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கரட்டடிபாளையம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சி,சுதா (28). இவர் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது கணவர் சின்னத்துரை மற்றும் மகன்கள் மதன், நந்தகுமார், மகள் மதுமிதா ஆகியோருடன் மனு அளிக்க வந்திருந்தார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தங்கள் மீது மண்ணென்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் சுதா கூறுகையில், நான் கடந்த பிப்ரவரி மாதம் கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியலூர் ஊராட்சி, நாமக்கல்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 9 ஆம் தேதி நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன். ஆனால், தற்போது அந்த பணியை மின்சாரத் துறையில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருபவரின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பனி நியமன ஆணையை உடனடியாக ரத்து செய்து, அப்பணியை எனக்கு வழங்கி, என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்க வேண்டும் எனக்கூறி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இந்த தீக்குளிக்க முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.