கோவை,செப். 4-
மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தியும், அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை காந்திபுரம் பகுதியில் நீட் தேர்விற்கு எதிரான மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி செல்ல முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த இரு பெண்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.

இதேபோல், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமத்துவ கழகம் அமைப்பை சேர்ந்த ராஜன் என்பவர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கோவை ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பலரை கைது செய்தனர் கோவை செல்வபுரம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அனிதா மரணத்தை இழிவுபடுத்தியதாக கூறி, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உருவபடத்தை செருப்பால் அடித்து, எரிக்க முயன்றனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வாலிபர் சங்கத்தின் தாலூகா செயலாளர் மூ.அன்பரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமலைசாமி, வாலிபர் சங்கத்தின் தாலூகா தலைவர் முருகமாணிக்கம், பொருளாளர் திலீப். சிஐடியு நிர்வாகி ஜி.பழனிச்சாமி உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேதுராமன் நன்றி கூறினார்.

இதேபோல், பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு நாம் தமிழர் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கி.உமாமகேசுவரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை செயலாளர் சின்னதாயி, நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் வி,எ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் எ.சகாதேவன், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் சி.ஜி.சங்கர், பி,கௌரிசங்கர், சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஏ.சகாதேவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பி. லலிதா, துணைத் தலைவர் ஆர்.கோமதி, சிபிஎம் மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை முன்பாக திங்களன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். இதில் ஆட்சியாளர்களைக் கண்டித்தும், நீட் தேர்வை விலக்கிட வலியுறுத்தியும் மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பவித்ரா, பொருளாளர் அ.ஷகிலா ஆகியோர் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் உள்பட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்டிக்கடை பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். முன்னதாக, மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்திகள் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொகுதி செயலாளர் ரஜேந்திர பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.