திருப்பூர், செப்.4-
அதிமுகவின் மூன்று அணிகளுக்கு இடையிலும் நடைபெறுவது கொள்கைச் சண்டையில்லை, பதவி, பணத்துக்கான சண்டைதான். மூன்று அணிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். பல்லடம் என்ஜிஆர் சாலையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாள், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பல்லடம் ஒன்றியக்குழு சார்பில் வழங்கப்பட்ட 90 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகையைப் பெற்றுக் கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வைத் திணித்ததால்தான் குக்கிராமத்தில் பிறந்து பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் போனது, அவரது மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.பல முனை வரிகளை நீக்கி ஜி.எஸ்.டி வரி விதிப்பைக் கொண்டு வருவதாக ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றக் கூட்டத்தில் மோடி கூறினார். ஆனால் இந்த வரி விதிப்பு சிறு, குறு தொழில் செய்வோரை நெருக்கடிக்குள் தள்ளுவதாக உள்ளது.

கோவை வெட்கிரைண்டர் தொழிலுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை ஜவுளித் தொழிலில் ஜாப் ஒர்க் செய்வோருக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு பின்னர் 5 சதவிகிதம் என மாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் வரி விதிப்பே இல்லாத ஜாப் ஒர்க் தொழிலுக்கு இதன் மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிடும் உணவுக்கு கூட மோடி அரசுக்கு பாதி வரி, பழனிச்சாமி அரசுக்குப் பாதி வரி என்று மக்கள் பணத்தைப் பறிக்கின்றனர். மறைமுக வரி விதிப்பின் மூலம் சாமனிய மக்களை கசக்கிப் பிழிகின்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியை 1 லட்சம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்று ஏற்றுமதியாளர்களிடம் பிரதமர் மோடி தேர்தல் சமயத்தில் உறுதியளித்தார். ஆனால் இப்போது அவரை தொழில்துறையினர் சந்திக்கக் கூட முடிவதில்லை. அதேபோல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையிலும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிறு, குறு தொழில் செய்வோர், விவசாயிகள் என பலதரப்பினரும் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தை ஆளும் பழனிச்சாமி அரசு ஊழல் அரசு, இந்த அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துவதாகச் சொன்ன பன்னீர்செல்வம் இப்போது அவரோடு சேர்ந்து கொண்டார்.

எதற்காகப் பிரிந்தார்கள், இப்போது எதற்காகச் சேர்ந்தார்கள்? டிடிவி தினகரன் 19 எம்எல்ஏக்களை பாண்டிச்சேரியில் கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பதற்கும், முன்பு எம்எல்ஏக்களை கூவத்தூரில் கடத்தி வைத்திருந்ததற்கும் என்ன வித்தியாசம்? திகார் சிறையில் இருந்து வந்த தினகரன் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதாகக் கூறினார். மூன்று அணியினருமே பாஜகவைத் தான் ஆதரித்தனர். இவர்களுக்குள் வேறு கொள்கை வித்தியாசம் கிடையாது. பதவி, பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளத்தான் சண்டை போடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

மத்தியில் ஆளும் மோடி அரசும், மாநிலத்தில் ஆளும் பழனிச்சாமி அரசும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. மக்களைக் காக்கும் போராட்டத்தில் இடதுசாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருக்கிறது. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியின் 9 தலைவர்கள் இந்த நாட்டில் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், புத்ததேவ் என ஒவ்வொரு தலைவரும் கைநீட்டி குற்றம் சாட்ட முடியாதவர்கள். நாட்டிலேயே ஏழை முதல்வர் என அழைக்கப்படும் திரிபுராவின் மாணிக் சர்க்கார், கேரளத்தின் தற்போதைய முதல்
வர் பினராய் விஜயன் என இவர்கள் மக்கள் நலனை அடிப்படையாக வைத்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

எனவே மக்கள் இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். முன்னதாக, இப்பொதுக்கூட்டத்துக்கு பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.கு.சத்தியமூர்த்தி, வை.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தின் நிறைவில் காதர் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: