நாகப்பட்டினம், செப்.3 –
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெருமை கம்யூனி ஸ்ட்டுகளுக்கு உண்டு. ஆனால் விடுதலை இயக்க வரலாற்றில் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர் களை தேடிப் பார்த்தாலும் கிடைக்கா மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் குறிப்பிட்டார். நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புதினப் பொதுக்கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல்அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றினார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகைமாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், வி.அமிர்தலிங்கம், ஆர்.முத்துப்பெருமாள், ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது -நாகை மாவட்டத்திலும் தமிழ கத்திலும் ஏற்பட்டுள்ள வறட்சி மிகமோசமானது. குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லை என்பது உச்சகட்டதுயரம். தில்லிக்குச் சென்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இங்குள்ளவர் களின் வேலையாகப் போய்விட்டது. மக்களைப் பற்றிக் கவலைப்பட வில்லை. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, டாக்டராகிவிடலாம் என்று கனவு கண்ட அரியலூர் அனிதா, நீட் தேர்வு நடத்திய கொடுமையால், மத்திய – மாநில அரசுகளின் செயலற்ற பொய்மை யினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது நமது நெஞ்சில் இறங்கியுள்ள பெரிய சோகம்.

மோடி, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்பேன் எனச் சொல்லி, ஆட்சிக்கு வந்து, சில லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, பல கோடிப் பேர்களின் வேலையைப் பறித்துக் கொண்டார் என்பது உச்சகட்ட கொடுமை. இவர்கள் சொல்வதெல்லாம் பொய். சந்தைகளில் மோடி மஸ்தானும் மந்திரவாதிகளும் மாறிமாறி எதையாவது சொல்லித் தாயத்து, மை போன்றவற்றை விற்றுக்காசாக்கி விட்டுப் பிறகு காணாமல் போய்விடுவார்கள் அப்படித்தான் மோடியும் பாஜக கூட்டமும்… மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்… காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்களை ஒன்று திரட்டிப் போராடச் செய்வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே…

செப்டம்பர் 1-இல் ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் பாசிச நாடுகளின் போர்வெறியால் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. இந்த யுத்தத்தில் தான், உலக வரலாற்றில் முதன் முதலாக அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசித் தீராக் கொடுமை களைச் செய்தது. எனவேதான், செப்டம்பர் 1-ஆம் தேதியை “ஏகாதிபத்திய எதிர்ப்பு தின”மாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். நாகப்பட்டினத்தில் ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினார்கள். அது பொன்மலை யில் பரவி துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார்கள் நமது பொன்மலைத் தோழர்கள். வெள்ளை ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப் போராடியது செங்கொடி இயக்கப் பாரம்பரியம்… செங்கொடி, முஸ்லிம் லீக் கொடி, காங்கிரஸ் கொடி இணைந்து விடுதலைக்காகப் போராடிய வரலாறு நிறைய உண்டு…உலகில் எங்கு விடுதலைக் காகப் போராட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் செங்கொடி இயக்கம் பங்கேற்கும். பகத்சிங், திருப்பூர்க் குமரன், கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி போன்ற நம் இயக்கத் தலைவர்கள் விடுதலை இயக்கம், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் பங்கு கொண்டு தியாகம் செய்துள்ளனர்.

இந்த விடுதலை இயக்க வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர் களைத் தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டார்கள். “கென்னடி, கிளிண்டன், கருப்பு இன ஒபாமா,டிரம்ப் இப்படி அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கை மாறாது. அமெரிக்கர் 70 முறை கொல்ல முயற்சித்தும் பிடல் காஸ்ட்ரோ, வீழ்ந்து விடவில்லை. நிமிர்ந்து நின்றது கியூபா. பாலஸ்தீனம், இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு துரோகம் செய்தது அமெரிக்கா. 1971-இல் வங்க தேச விடுதலைக்காக இந்தியா உதவியபோது, அமெரிக்கா தனது 7-ஆவது கப்பல் படையை அனுப்பி இந்தியாவை அச்சுறுத்த எண்ணியது. அப்போது உதவிக்கு வந்தது சோவியத் ரஷ்யா.  வருகின்ற நவம்பர் 9,10,11 ஆகிய நாட்களில் அகில இந்திய அளவில் விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் நாம் பங்கேற்று வெற்றிபெறச் செய்வோம். உரிமைகளுக்காகப் போராடும் பாதை; அது வெற்றிப் பாதை” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: