திருப்பூர், செப். 3-
திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வில் விலக்கு கிடை க்காததே மாணவி அனிதாவின் மரணத்துக்குக் காரணம். இப்பிரச்சனையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அனிதாவின் மரணம் தன்னிச்சை யானது அல்ல, தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளார் என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கிருஷ்ணசாமி கூறுவது அப்பட்டமான கோயபல்ஸ் பொய், அவதூறான தகவல். சமீப காலமாக கிருஷ்ணசாமி பாரதிய ஜனதா ஆதரவு நிலை எடுத்து வருகிறார்.

மோடிக்கு எச்.ராஜா முட்டுக் கொடுப்பதைப் போல இப்போது கிருஷ்ணசாமி முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாடே நீட் தேர்வை எதிர்க்கும்போது இவர் ஆதரிக்கிறார். மாணவர்கள் நலனு க்குப் புறம்பான கருத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை ஏற்க முடியாது. 1975க்கு முன்பு கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக மாற்றினர். கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இப்பிரச்சனையில் சென்னையில் திங்களன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளோம்.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் மீது மத்திய அரசு மிகப்பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. திட்டக்குழுவைக் கலைத்து விட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை மோடி அரசு கொண்டு வந்தது. அது சமஸ்டி முறையில் செயல்படும், மாநிலங்களுடன் கலந்து பேசி செயல்படும் என்று மோடி கூறினார். ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நிதி ஆயோக் எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. குறிப்பாக நிதி ஆயோக் மூன்றாண்டு செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில் கல்வி, சுகாதாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை குறிப்பிட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 20 குழந்தைகள், 50 குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளை அரசு, தனியார் கூட்டுறவு மூலம் தனியாரிடம் ஒப்படைத்து, அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பல ஆயிரம் பள்ளிக்கூடங்கள் படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். ஏற்கெனவே உயர் கல்வி 90 சதவிகிதம் தனியார்மயம் ஆன நிலையில் பள்ளிக் கல்வியையும் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற, சாதாரண ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும். எனவே மத்திய அரசின் இந்த முடிவை மாநில அரசு எதிர்க்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் 1 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் கூறியிருக்கிறார். இதனால் கிராமப்புற ஏழை, எளிய சாமானிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். மேலும் ரிசர்வ் வங்கியும், பழைய ரூ.1000, ரூ.500 பணத்தாளில் மொத்தம் 17 லட்சம் கோடியில், 16 ஆயிரம் கோடி மட்டுமே வரவில்லை என்று சொல்லியிருக்கிறது. இதன் மூலம் செல்லா பணம் அறிவிப்பு, பணம் படைத்த திமிங்கிலங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கத்தான் பயன்பட்டுள்ளது.

நீட், ஜிஎஸ்டி, நிதி ஆயோக், செல்லா பண விவகாரம் என அடுத்தடுத்து மக்கள் மீது கடும் தாக்குதலை மத்திய அரசு தொடுத்து வருகிறது. மக்களைப் பாதிக்கும் இப்பிரச்சனைகளில் முன்னுக்கு நின்று மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.  இந்த சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply