தீக்கதிர்

தீயணைப்புப் படையில் ஒரு பன்முக சாதனையாளர்

உரிய வாய்ப்பும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி யுள்ளார் மீனாட்சி விஜயகுமார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பைப்பட்டி கிராமம் என்றாலும் பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் சென்னை. விளையாட்டில் சாதித்த இவரது குடும்பத்திற்கு ஒரு அரசியல் பின்னணியும் உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். அப்பா, சித்தப்பா, அத்தை எனப் பலரும் விளையாட்டு வீரர்கள். விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த தால் சிறு வயது முதல் விளையாடி வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வந்தார். சென்னையிலுள்ள பரத் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது தொடர்ச்சியாக 5 முறை ‘சாம்பியன்’ பட்டமும், ‘ஆல் ரவு ண்டர்’ பட்டமும் வென்றதால் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அங்கு ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார். கல்லூரியில் பல்கலைக் கழக அளவில் ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டில் கொடி கட்டிப் பறந்த இவர் ‘சிறந்த வீராங்கனை’ பட்டத்துடன் வலம் வந்தார். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் 1991 ஆம் ஆண்டு புது தில்லி சென்றார். அங்கு பாரதிய வித்யா பவனில் தொழில் உறவு, பணியாளர் மேலாண்மையில் முதுகலை பட்டயம் பெற்றார். மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த மீனாட்சி, 1994 ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் சென்னை செல்லம்மாள் பெண்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரி யராக வாழ்க்கையை துவக்கினார். பிறகு, புதுதில்லியில் தகவல் தொடர்புத்துறையின் பேரா சிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார். நாட்டின் இரண்டாவது ராணுவம் என்று அழைக்கப்படும் தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறையில் தானும் சேவை செய்ய வேண்டும் என்பதால் தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர், 1998ஆம் ஆண்டில் தமிழ்நாடு தேர்வாணை யத்தின் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

ஆனாலும், தீயணைப்புத் துறையில் பெண்கள் பணியாற்ற முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2003இல் தான் தீயணைப்புத் துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதன் மூலம் இந்திய தீயணைப்புத்துறையில் முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு சொந்த மானார். ‘காக்கிச் சட்டை’ அணிய வேண்டும் என்ற அவரது சின்ன வயது லட்சியம் நிறைவேறியது. தீயணைப்புத் துறையின் சென்னை மாவட்ட அலுவலராக பணி நியமனம் பெற்ற முதல் நான்கு ஆண்டு காலத்தில் குடிசை தீ விபத்து, கட்டட இடிபாடு, சுனாமி என 300க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் தனது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டினார். இதனால், 2013 ஆம் ஆண்டின் வீர-தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதும் பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், இயற்கைச் சீற்றம் என வருடத்தில் 365 நாட்களும் தனது உயிரையும் பணயம் வைத்து பிற உயிர்களை காக்கும் சேவையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வரும்இவருக்கு 2008-இல் இந்திய தீயணைப்பு பொறி யாளர் கல்விக்கழகத்தின் உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரிட்டனில் உள்ள மார்ட்டன் மார்ஷிலில் தீ அறிவியல், தீ பாதுகாப்பு சான்றிதழ் படிப்பில் 2014 ஆம் ஆண்டு நான்காம் நிலைக்கான விருதையும் பெற்றார். இங்கிலாந்தில் 2014 ஆம் ஆண்டு தொழில்சார் பாதுகாப்பு சுகாதாரம் குறித்த தேசிய தேர்வாணையம் நடத்திய தேர்வில் தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்புக் கான சர்வதேச சான்றும் கிடைத்தது.

பல்வேறு தனியார் அமைப்புகளும் நிறு வனங்களும் இவரது சேவைகளைப் பாராட்டி தீயணைப்புத் துறையின் முதல் பெண்மணி விருது, தீயணைப்புத் துறையின் சிறந்த பெண் அதிகாரி என ஏராளமான விருதுகள் வழங்கி கவுரப்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் பாராட்டையும் பெற்றார். தன் உயிரைக் கொடுத்து பிற உயிர்களை காக்கும் துறையில் 24 மணி நேரமும் விழிப்புடன் செயலாற்றி ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததும் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதும் இவரது சாதனைக்கு மணிமகுடமாகும். தீயணைப்பு சேவையில் மட்டுமல்ல, விளையாட்டு வீராங்கனையாகவும் சாதனை படைத்து வருகிறார். உலக அளவில் தென்கொரியாவில் 2010 ஆம் ஆண்டில் நடந்த தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்றது இவரது திறமைக்கு மற்றொரு மைல்கல் ஆகும். இப்பதக்கம் தீயணைப்புத் துறையினருக்கு ஒலிம்பிக்கிற்கு இணையானதாகும்.

2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை விளையாட்டில் டென்னிஸ் போட்டியில் தங்கமும், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு உலக அளவில் பதக்கம் வென்ற தீயணைப்பு பெண் அலுவலர் என்ற பெயரை பெற்றார். ஹாக்கி, டென்னிஸ், குண்டு எறிதல் போட்டிகளில் பதக்கங்களை அள்ளி வந்த மீனாட்சி, பேட்மிண்டனுக்கு (இறகுபந்து) மாறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒருவார காலம் நடந்த உலக காவல், தீயணைப்புத் துறை வீரர்களுக்கான விளை யாட்டுப்போட்டியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து காவல்துறையின் சார்பில் 100 வீரர்கள் கலந்துகொண்டனர். தீயணைப்புத் துறை சார்பில் பங்கேற்ற ஒரே ஒரு வீராங்கனை மீனாட்சி மட்டுமே. இறகுப் பந்து விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி வரைக்கும் முன்னேறிய மீனாட்சி விஜயகுமார் காவல்து றை வீராங்கனைகளின் கடும் சவாலை எதிர்கொண்டு மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இரட்டையர் பிரிவில் மலேசிய காவல் துறை வீராங்கனை பூலாங்குடன் இணைந்து விளையாடிய மீனாட்சி இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இம்முறையும் இரண்டு பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா வின் பெயரையும் இடம்பெற செய்தார் மீனாட்சி விஜயகுமார். தாய் நாட்டின் தேசியக்கொடியை உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்த மீனாட்சி விஜயகுமார் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் விஜயகுமார் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரியாக உள்ளார். இவரது மகன் பெயர் கிஷிதி. அமெரிக்கா சென்று பதக்கத்துடன் தாயகம் திரும்பிய துணை இயக்குநர் மீனாட்சி விஜய குமாருக்கு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் தீயணைப்புத் துறையினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சக ஊழியர்கள், அதிகாரிகள் என பல தரப்பி லிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தீக்கதிர் சார்பிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.

கூட்டுறவுத்துறை பதிவாளராக பணி யாற்றிய மீனாட்சியின் தந்தை பி.கே. பத்ம நாதன் மறைவுக்கு பிறகு, சிறிது காலம் குடும்பம் வறுமையில் உழன்ற போதும் தாய் வி.எஸ். கிருஷ்ணகுமாரி மனம் தளராமல் சவால்களை எதிர் கொண்டதால் மூத்த மகள் மீனாட்சி தீயணைப்புத் துறையிலும், இளைய மகள் சாந்தா வெளிநாட்டில் மருத்துவத் துறையிலும் சேவை செய்கிறார்கள். வி.எஸ். கிருஷ்ணகுமாரியின் தந்தை மறைந்த ஐஏஎஸ் அதிகாரி வி.எஸ் சுப்பையா. இவரது குடும்பத்துக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது என்று கூறினோம் அல்லவா? விடுதலைப் போராட்ட வீரர், மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணி, வேளாண்மை, காவல், உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புக்களை வகித்த வரும், குணத்தாலும், கொள்கையாலும், நேர்மையாலும் உயர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றவரான கக்கன்ஜியின் மூத்த பேத்தி இவர்.