திருச்சிராப்பள்ளி,செப்.3-
திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக பலியாயினர். திருச்சி கிழக்கு ஆண்டாள் வீதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன்(75). சினிமா வினியோகஸ்தரான இவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் மலைக்கோட்டையை அடுத்த சறுக்குபாறை தஞ்சாவூர் குளத்தெருவில் உள்ளது. இந்த கட்டிடம் 1300 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் தரைத்தளத்தில் கிருஷ்ணவேணி, இவரது மகன்கள் வினோத்குமார், விக்னேஷ், கிருஷ்ணவேணியின் தாயார் ரஞ்சிதம் ஆகியோர் குடியிருந்தனர்.

முதல் தளத்தில் இரும்பு வியாபாரி பழனி(35). மனைவி ராசாத்தி(29). ஒன்றரை வயது மகள் பரமேஸ்வரி ஆகியோரும், இரண்டாவது தளத்தில் கார்த்திக்(30) மனைவி கார்த்திகா(29), மகன் ஹரிஷ்(5) ஆகியோரும், 3வது தளத்தில் ஆட்டோ டிரைவர் சங்கர்(35) மனைவி அன்பழகி, மகன் தினேஷ் மகள் திவ்யா ஆகியோரும் வசித்து வருகின்றனர். கண்ணப்பன் வீட்டிற்கு இடதுபுறத்தில் இவரது தம்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது. கீழ் தளத்தில் முகமதுயூசுப் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மாடிப்படியின் அடித்தளத்தில் ஒரு அறை கட்டப்பட்டுள்ளது. இதில் தக்காளி வியாபாரிகள் கண்ணன், மதிவாணன், கார்த்திக் ஆகியோர் வசித்து வருகின்றனர். மாடியில் சுந்தரவள்ளி(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கண்ணப்பன் வீட்டிற்கு வலதுபுறம் இருந்த பழங்கால வீட்டை ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி மணிகண்டன் வாங்கி உள்ளார். இவர் அந்த வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தபணி சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறு அன்று அதிகாலை கல்லூரி மாணவர் வினோத்குமார் தூங்காமல் அதிகாலை 3.50 மணியளவில் லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. சுவற்றில் ஓரிரு இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதை பார்த்த வினோத்குமார் ஏதோ நடக்க போகிறது என்பதை உணர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தம்பியை எழுப்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் அந்த 3 மாடிக்கட்டிடம் அடியோடு பெயர்ந்து மணிகண்டனுக்கு சொந்தமான காலி இடத்தில் விழுந்தது.

அப்போது அந்த வீட்டின் சுவரோடு ஒட்டியிருந்த ராஜேந்திரன் வீட்டுச் சுவரும் விழுந்தது. இதில் பயங்கர சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்து ஓடிவந்தனர். அந்த இடம் மிகவும் இருட்டாக இருந்ததால் அருகில் யாரும் செல்லவில்லை.  உடனே போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியை ஆர்டிஓ பஷீர், போலீஸ் கமிஷனர் அருண், துணை கமிஷனர் சக்திகணேசன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் துரிதப்படுத்தினர். இதில் 2ஆவது தளத்தில் இருந்த கார்த்திகாவை மீட்டனர். பின்னர் கார்த்திகாவின் மகன் ஹரிஷ், கணவர் கார்த்திக் மீட்கப்பட்டனர்.உடன் மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்த போது அவர்கள் இறந்து விட்டது தெரியவந்தது.

மேலும் ராஜேந்திரன் வீட்டு அறையில் குடியிருந்த தக்காளி வியாபாரிகள் கண்ணன், மதிவாணன், கார்த்திக் ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் தொடர்ந்து நடந்த தேடும் பணியில் பழனி, அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனர். இடிந்து விழுந்த வீடு மற்றும் மீட்புப் பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் ராசாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: