தாராபுரம், செப்.3 –
தாராபுரம் மற்றும் அதைத்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து முன்றாவது நாளாக மழை பெய்து வருகிறது. மேலும் தாராபுரம் அடுத்துள்ள நல்லதங்காள் அணை வேகமாக நிரம்பிவருகிறது. தாராபுரத்தை சுற்றிலுள்ள கிராமப்புற பகுதிகளில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. பொன்னாபுரம், நாரணாபுரம், பொட்டிக்காம்பாளையம், கரிகாளிபுதுர் தாசர்பட்டி, கொளத்துப்பாளையம், நல்லாம்பாளையம், டி.குமாரபாளையம், பள்ளபாளையம், கோனேறிபட்டி, அலங்கியம், கொங்கூர் பகுதிகளில் கனத்த மழையின் எதிரொலியாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கொங்கூர் குளம், கொண்டரசம்பாளையம் குயவன் குளம், சத்திரம் குளம், பொன்னாபுரம் குளம், சின்னப்புத்துர் குளங்கள் நிரம்பி வருகிறது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்து வரும் கனத்த மழையின் காரணமாக குதிரையாறு, சண்முகநதி உபரி நீர் கள்ளிமந்தையம் திருமலை கவுண்டன்வலசு பகுதி வழியாக நல்லதங்காள் அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக இரண்டே நாளில் நல்லதங்காள் அணையில் மொத்த கொள்ளளவான 32 அடியில் 22 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. தற்போது, அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதே அளவு நீர்வரத்து தொடர்ந்தால் அணை வேகமாக நிரம்பிவிடும். இதற்கிடையே, மழை காரணமாக ஞாயிறன்று நஞ்சியம்பாளையம் மற்றும் வீராட்சிமங்கலத்தில் இரண்டுவீடுகள் இடிந்து விழுந்தது. ஞாயிறன்று காலை 8 மணி நிலவரப்படி தாராபுரத்தில் 41 மி.மீட்டரும், மூலனூரில் 74 மி.மீட்டர், உப்பாறில் 27 மி.மீட்டர் மழை பதிவானது.

Leave A Reply

%d bloggers like this: