சென்னை,

தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.7 லட்சம்  நிதியை வாங்க மாணவி அனிதாவின் குடும்பத்தினர்  மறுத்துவிட்டனர்.

நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா வெள்ளியன்று தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபிரியா ரூ.7 லட்சத்திற்கான காசோலையை அனிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கினார். காசோலையை வாங்க அனிதாவின் சகோதரர், என் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நாங்கள் உதவித் தொகையை ஏற்றுக் கொள்கிறோம் என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: