தமிழ் முற்போக்கு, யதார்த்த எழுத்தின் ஆளுமையாக விளங்கிய தனுஷ்கோடி ராமசாமி (த.ரா).தமிழ் ்சமூகத்தின் மரபான மண்ணையும் மக்களையும் தன் நெஞ்சினில் சுமந்து, அவர்களின் ஏற்ற, இறக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களைக் குருதியும் பிண்டமுமாக மறு உற்பத்தி செய்தவர் த.ரா.இதற்கு அவரின் எழுத்துக்களே சான்றாகும். அந்த அடிப்படையில் சிறுகதைகளில் வருமபாத்திரங்கள், வைப்புநிலை மற்றும் பண்பு அடிப்படையில் ஆராயலாம். அவர்கள் தலைமை மாந்தர்கள், துணைமை மாந்தர்கள், எதிர்முனைமாந்தர்கள், சிறப்பு நிலை மாந்தர்கள், பிற மாந்தர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர்.

தலைமை மாந்தர்கள்:
தலைமை மாந்தர்கள் கதையின் நகர்விற்கும், கருப்பொருளின் உணர்த்தலுக்கும் பிரதானமாக விளங்குபவர்கள். தொடக்கம் முதல் இறுதிவரை கதை முழுவதும் விரவிவரும் தனித்தன்மை கொண்டவர்கள். ‘உசுப்பினான்’-தனுஷ்கோடி, ‘மண்ணி லேதான் சொர்க்கம்’,-சாயர்புரத்தைச் சேர்ந்தவர், ‘முல்லைக்குத் தேர்’ -கல்லூரிப் பேராசிரியர், ‘கூட்டுப்புழு’, -மெய்யப்பன், ‘ரெட்டியார் சத்திரம்’ -பொன்னுச்சாமி, ‘சத்துணவு’ – பாபு அப்பா, ‘தரகன்பாடு’- கொண்டுச்சாமி, ‘தூ’-மாரியம்மாளின் கணவன், ‘பரவசம்’ -கல்லூரிப் பேராசிரியர், ‘முல்லைக்கொடியும் பன்றிகளும்’ -மாவட்டக்கல்வி அதிகாரி,‘பெண்மை எங்கும் வாழ்க’ -தமிழ்ச்செல்வன், ‘நேசம்’ -ரெங்கசாமி, ‘ஆயிரம் ஆண்டுத்தணல்’ – பள்ளி ஆசிரியர், ‘வழிகள்’ -பொன்னுவேல், ‘திரியுரானுக’- பள்ளி ஆசிரியர், ‘புதிய தலைமுறை’ – தனுஷ்கோடி, ‘தீம்தரிகிட’ – தமிழாசிரியர் ஆகியோர் தலைமை மாந்தர்களாக விளங்குகின்றனர். சமூக அக்கறை உடையவர்கள், இலட்சியவாதிகள், மனிதநேயம் மிக்கவர்கள், போராட்டக்குணம் உடையவர்கள், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் எனக் கதாபாத்திரத் தன்மைக்கு ஏ ற்ப இவர்கள் பகுக்கப்படுகின்றனர்.

சமூக அக்கறை உடையவர்கள்:
உசுப்பினான் கதையில், பாலகிட்னன் தன் தம்பி தங்கையோடு தாயின் வரவிற்காகச் சாலையோரம் நின்று கொண்டிருக்கிறான். அவன் நிலைமை அறிந்து ஆசிரியர் உதவி செய்ய நினைக்கிறார். அவன் மறுக்கிறான். வருத்தமுற்ற அவர் சோர்வுடன் வீடு திரும்புகிறார். அங்கு அவர் மனைவி, நெய் ஊற்றியதால் தன் மகன் சாப்பிடவில்லை எனக் வலைப்படுகிறாள். அதற்கு ஆசிரியர், “உனக்கு ஒம் பிள்ளை நெய் ஊத்தின சோறச் சாப்பிட மாட்டேங்குதேண்ணு கவலை … எங்களுக்கு எங்க செல்வங்களின் பசிக் கொடுமைக்குக் கஞ்சி குடுக்க முடியலேங்கற கவலை… (ப.41) என்கிறார்.

மண்ணிலேதான் சொர்க்கம் கதையில், அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஒரே பேருந்தில் பயணம் செய்கின்றனர். சாயர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவன் அவர்களோடு பயணிக்கிறான். உலக மக்கள் அனைவரும் பிரிவினை இன்றி இந்தப் பயணத்தைப் போல் ஒற்றுமையாக வாழ்ந்தால் உலக அமைதியும், சகோதரத்துவமும் பெருகும் என ஏங்குகிறான். முல்லைக்குத்தேர் கதையில், போராட்டங்களில் கலந்து கொண்டதால் பேராசிரியர் சிறையில் இருக்கிறார். சிறைக்கைதியான அருள் பிரகாஷ், அவரைப் பற்றி விசாரிக்கிறான். “சமூகம் சுரண்டலும், வஞ்சனைகளும்நிறைந்ததாக உள்ளது. இது சமத்துவம், சகோதரத்துவம், பாசமயமான சமூகமாக மாறவேண்டும். அதனால் என்னால் முடிந்த வேலைகள் செய்கிறேன்” என்கிறார்.

இவர்கள், கதைகளில் சமூகப் பொறுப்பும், அக்கறையும் மிகுந்த பாத்திரங்களாக வருகின்றனர்.சமூகஅவலங்களை நினைத்து வருந்துபவர்களாக இருக்கின்றனர். சமூக மேன்மைக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்கின்றனர்.

இலட்சியவாதிகள்:
கூட்டுப்புழு – மெய்யப்பன், ரெட்டியார் சத்திரம் – பள்ளி ஆசிரியர், போன்றவர்கள் நேர்மையோடு வாழ நினைக்கின்றனர். அதன் விளைவால் ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்கின்றனர். குடும்ப வாழ்க்கையை இழக்க நேரிடுகின்றது. இருப்பினும், இறுதிவரை லட்சியத்தோடு வாழவே முற்படுகின்றனர். சத்துணவு கதையில், இடம்பெற்றுள்ள தலைமைமாந்தர் (பாபு அப்பா) நேர்மையும் கண்டிப்பும் மிகுந்தவராக விளங்குகிறார். லஞ்சம், சாதி மத வித்தியாசம், தொழில்களில் ஏற்றத்தாழ்வுகள், பண வசதிகள் கொண்டு மனிதர்களை மதிப்பிடுதல், போன்றவை இழிவானசெயல் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். சத்துணவு அமைப்பாளராக இருக்கிற அவரது அண்டை வீட்டுப் பெண் கொண்டு வந்த உணவை, பாபு அப்பா உண்ண மறுக்கிறார்.

தன் மனைவியிடம்,  “ஆயிரந்தடவ சொல்லியிருக்கேன்… என்னால தவறு களோடேயும்… கொடுமைகளோடேயும் சமரசம் செய்து கொள்ளமுடியாது. தவறுகளையும் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடுவேன். முடியலேன்னா… ‘கம்முன்னு இருப்பேன்… எந்த வகையிலேயும் அதுக்கு ஆதரவாக மாட்டேன். பேச்சால… தலையசைக்றதால… ஏன் கண் இமைக்கறதாலகூட ஆதரவு தெரிவிக்கமாட்டேன்… ஊழல் பண்றவங்க குடுக்கறத நான் திங்கமாட்டேன். என் வீட்டுக்குள்ள அந்தப் பண்டத்த நொழைய விடமாட்டேன்… மூச்சுத் திணறிக்கிட்டே ஈஸிச்சேரில் போய் விழுந்தார். கண்களில் அனல் பறந்துக்கிட்டிருந்தது.” (ப.472) எனத் த.ரா.சித்தரிக்கிறார்.

நியாயத்திற்காகப் போராடுதல், இழப்புகளை எதிர்கொள்ளுதல், எச்சூழலிலும் தங்கள் நிலையில் தாழாதவர்களாக இருத்தல் போன்ற பண்புகளை உடைய மாந்தர்களாக இவர்களைத் த.ரா.படைத்திருக்கிறார்.

மனிதநேயம் மிக்கவர்கள்:
தரகன்பாடு கதையில், இடம்பெற்றுள்ள கொண்டுசாமிக்கு வசதியான இடத்தில் பெண் பார்க்கிறார்கள். ஆனால், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுப்பாலுவின் மகளைப் பார்க்கிறான். அவளையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். தரகர் நம்மையாவிடம், “அந்தச் சாப்பாடு வேண்டாம்… பொண்ணும் நகையும் வேண்டாம்…அங்கே குடுத்த கடுங்காப்பியும்… அந்தப் பொண்ணும் எனக்கு போதும்…” (ப.177) ‘தூ’ கதையில், வசதிபடைத்த பெண், நள்ளிரவில் வெளியூர் செல்லநினைக்கிறாள். எதிர் வீட்டில் வசிக்கும் தொழிலாளியான மாரியம்மாளின் கணவனைத் துணைக்கு அழைக்கிறாள். மாரியம்மாள் தன் கணவன் செல்வதைத் தடுக்கிறாள். அதற்குஅவன், “அவசரம் ஆத்திரத்துக்கு அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு உதவாட்டா மனுஷங்களே இல்லை… தொணைக்குப் போயிட்டு வந்தா நான் என்ன கொறைஞ்சா போவன்” (ப.216) என்கிறான்.

முல்லைக்கொடியும் பன்றிகளும் கதையில் இடம்பெற்றுள்ள மாணவன், தன் தந்தை இறந்துவிட்டதால் தேர்விற்கு காலதாமதமாக வருகிறான். மற்ற ஆசிரியர்கள் அவனைத் தேர்வு எழுத மறுத்து விடுகின்றனர். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர், இப்பொழுதுதான் கிராம மக்கள் கல்வியை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதைச் சட்டத்தைக் காட்டி தடுத்து விடாதீர்கள். சட்டம் அனுமதித்ததைவிட பத்து நிமிடம் காலதாமதமாக வந்த மாணவனை தேர்வுஎழுத விடாமல் திருப்பி அனுப்புவது மனிதாபிமானம் அற்றச் செயலென ஆதங்கப்படுகிறார். மேற்கூறிய பாத்திரங்கள் தொண்டுள்ளம், பரந்த மனப்பான்மை, மனிதம் நிறைந்தவர்களாக விளங்குகின்றமையை அறியமுடிகிறது.

போராட்டக் குணம் உடையவர்கள்:
ஆயிரம் ஆண்டுத்தணலில் பள்ளி ஆசிரியர், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடுகிறார். சாதிக்குச் செய்யும் துரோகமாகத் தேவர் சங்கச் செயலாளர் கண்டிக்கிறார். அதற்குப் பள்ளி ஆசிரியர், “எனக்குள்ள வீரமும் விவேகமும் நான் பெறந்து வளர்ந்த இனம், சூழ்நிலையினால இருக்கலாம். அதுக்கு நான் துளியும் துரோகம் பண்ணிறல. அவங்களும் தெளிந்த அறிவோட இருக்கணும்… உயர்ந்த மனிதாபிமானத்தோட இருக்கணும்… சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலேயும் அவங்களும் பங்களிப்புச் செய்து உயரணும்னு நெனைக்கிறேன். இது எப்படி ஜாதிக்குச் செய்யற துரோகமாகும்…?” (ப.523) என்கிறார். சமூகச் சிக்கல்களைத் துணிவோடு எதிர்கொள்பவர்கள், நெஞ்சுரம் மிக்க கதாபாத்திரங்கள், கதைகளில் பெருமளவு காணப்படுகின்றனர்.

தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்:
வழிகள் கதையில், எழுத்தாளன் வெண்ணிலவனால் ஏமாற்றப்பட்ட அல்லி, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள். அச்சமயம் பொன்னுவேல், “பெண்மைங்கறது பாலா?… ஏதாவது பட்டுட்டா உடனே திரிஞ்சு போறதுக்கு… பைத்தியக்காரி… பலபேர்ட்ட கெட்டழிஞ்ச… அந்த வெண்ணிலவன் தலைநிமிர்ந்து நவயுக சிற்பியாகத் திரியறபோது நீ ஏன் வாழக்கூடாது”? (ப.163) என ஆத்திரம் பொங்கக் கேட்கிறான்.

வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் இடர்களுக்கு பயந்து உயிரை விடநினைப்பது கோழைத்தனம். எதிர்த்துப் போராட வேண்டும் என்பதனை பொன்னுவேல் மூலம் த.ரா.தெரியப்படுத்துகிறார். இளம் பிராயத்தில் தோல்வி கண்டு துவண்டு வீழ்தல் கூடாது. தன்னம்பிக்கையே வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: