தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிற சிவசுப்பிரமணியன் மார்க்சியத்தைத் தன் ஆய்வுக்கான பின்புலமாகக் கொண்டிருப்பவர். நாட்டுப்புற ஆய்வில் மார்க்சியப் பார்வையுடன் இயங்கிய நா.வானமாமலையின் மாணவர். அவருடனான நேர்காணலின் பகுதிகள்.

உங்களுடைய ஆரம்பகால இளமைப்பருவம் மற்றும் குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கலாமா?
நான் 1943ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்தேன். என்னோட அப்பா அரிசி கொள்முதல் வியாபாரம் செய்து வந்தார். ரேசன் வேறு இருந்ததால் வியாபாரம் செய்வது சிரமமாக இருந்தது. அப்போது உறவினரோடு சேர்ந்து லாரி வாங்கி ஓட்ட ஆரம்பித்தார் அப்பா. அந்தக்காலகட்டத்தில் தான் டீசல் லாரி அறிமுகமாகியிருந்தது. அப்புறம் அதிலிருந்து பிரிந்துவந்தார். அப்போது சென்னை சூளைமேட்டில் 3,4வது வகுப்பு கார்ப்பரேஷன் ஸ்கூலில் படித்தேன்.

கட்டபொம்மனின் அமைச்சரவையில் இருந்த தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை எனக்குத் தாத்தா முறை. அவருடைய பேரனுக்குப் பேரன்தான் என் தாத்தா. என்னோட அம்மாவின் குடும்பத்தில் தாய்மாமனார் காங்கிரசில் இருந்தவர். 1952,1957 தேர்தல்களில் வெற்றிபெற்று திருநெல்வேலிநாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் பெயர் தாணுப்பிள்ளை. 10 ஆண்டுகாலம் எம்.பியாக இருந்தார். அவர் 1982 ஆம் ஆண்டில் இறக்கும்போது பஞ்சாயத்து போர்டுக்கு வரி கட்டுற அளவுக்குக்கூட சொத்து கிடையாது. சொந்தமாக வீடோ, பிளாட்டோ கிடையாது. அப்படி ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. நாடாளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சனை பற்றி நிறைய பேசியிருக்கிறார். என்னோட அப்பாவும், அவரும் கொழும்பில் நண்பர்கள். அதன் பிறகுதான் என் அம்மாவை அப்பாவுக்குத் திருமணம் செய்துவைத்தார். நண்பர்களாக இருந்து உறவினர்களாக மாறிவிட்டார்கள்.

நான் 3,4வது வகுப்பில் படிக்கும்போது அப்பா சென்னைக்கு வந்துவிட்டார். அப்போது வகுப்புகள் மத்தியான நேரத்தில் நடக்கும். ஐந்தாம் வகுப்பு காலை நேரத்தில் நடக்கும். மீதி நேரம் சும்மா இருப்பேன். சின்ன வயதில் இதயத்துடிப்பில் சிறு பிரச்சனை இருந்தது. ருமேட்டிக் பீவர் என்கிற வாதக் காய்ச்சல் வேறு இருந்தது. மாடிப்படியில் ஏறி இறங்கக்கூடச் சிரமம். எனக்குச் சகோதர, சகோதரி யாரும் கிடையாது. நான் வீட்டுக்கு ஒரே பையன். அதனால் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். வெளியே விளையாட விடமாட்டார்கள். என்னோட அப்பா இ.எஸ்.எல்.சி படித்தவர். மொழி தெரியாத இடங்களுக்குக்கூட வியாபார விஷயமாகப் போவார். அப்போது அங்கிருந்து புத்தகங்கள் வாங்கி வருவார். அவருக்குப் பிடித்த அறிஞர் வெ.சாமிநாதசர்மா. அவர் மேல் ஈடுபாடு உண்டு. அதேபோல் அப்பாவுக்குப் பெரியார் மேலேயும், நேரு மேலேயும் ஈடுபாடு மரியாதை உண்டு.

சென்னையிலிருந்து எப்போ வந்தீங்க?
1952ல் லாரி நிறுவனத்தை விட்டு விலகி, அப்பா பழையபடி தானியங்கள் விற்கும் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுக்காகத் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வாடகைக்கு வீடு எடுத்தோம். அது என்னோட அம்மாவோட ஊர். பின்பு அங்கு குடியேறினோம். 1952லிருந்து 1958 வரைக்கும் இருந்தோம். ம.தி.தா.
இந்து ஹைஸ்கூல்லதான் படிச்சேன். என்னோட தாய்மாமனார் பாளையங்கோட்டையிலதான் இருந்தார். அம்மாவழி உறவுக்காரங்க திருநெல்வேலியில இருந்தாங்க. அப்பாவழி உறவு யாரும் அங்கு இல்லை.

சிறுவயது மனநிலைக்கு நெல்லையில் இருந்த சூழல் எப்படி இருந்தது?
நல்லா இருந்தது. நல்ல இலக்கியச் சூழல் இருந்தது. தொ.மு.சி.னு ஒரு எழுத்தாளர் இருக்கார்னு இளங்கோ ஸ்டோர்ன்னு ஒரு கடை மூலமா தெரிஞ்சது. அப்ப இயக்கத் தோழர் பி.பி. சிவம்னு ஒருத்தர் இருந்தார். அங்க கடையில் கல்லாப்பெட்டிக்கு பக்கத்துல உள்ள பலகையில உட்கார்ந்து பத்திரிகைகளைப் படிச்சிட்டுப் போவார் தொ.மு.சி. அப்ப எழுத்தாளர்களுக்கே உரிய ஜிப்பா எல்லாம் போட்டிருப்பார். சிவாஜி, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வேறுபாடு திருநெல்வேலியில் இல்ல. மாணவர்கள்கிட்ட ம.பொ.சி. மேல அபிமானம் இருந்தது. திராவிட இயக்கம் சார்பான மொழி அபிமானம் இருந்தது. அப்ப காங்கிரஸ் கட்சி தவிர்த்து, திராவிடக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் மூன்றுக்குமே இயக்கச் செயல்பாடு இருந்தது. நான் இந்த மூன்று குழுவிலேயும் இல்லை. ஆனாலும் அவங்களோட பத்திரிகைகளை வாங்கிப் படிப்பேன். இப்படி பத்திரிகைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி நூலகத்துல சரவண முத்துன்னு ஒரு நூலகர் இருந்தார். நிறைய நூல்களும், மாணவர்களைப் படிக்கத் தூண்டும் ஊக்கமும் ம.தி.தா. இந்து பள்ளியில் கிடைத்தது. மாலையில் 4 மணிக்குப் பிறகு 5 மணி வரை நூலகத்திலேயே படிப்போம். காலையில் ஒரு அரை மணி நேரம் பத்திரிகைகள் படிப்பேன். அப்ப நூல்களைக் கிழிக்காம பார்த்துக்க இரண்டு மாணவர்களை நியமிப்பாங்க. அவங்களை ஊக்கப்படுத்தும் விதமாபடிக்கிறதுக்கு வாரத்துக்கு ஒரு
புத்தகம் கொடுப்பாங்க. அதை வாங்குறதுக்கு எங்களுக்குள்ளே போட்டி இருக்கும். அங்கு மரபு வழி தமிழாசிரியர்கள் பலர் இருந்தாங்க. அது பற்றிய விமர்சனங்களும் உண்டு. அப்ப தமிழ் மூலம் படிப்பித்ததால் மொழியுணர்வை வளர்க்கும் ஆர்வமும் இருந்தது. அதுல பல பேர் திராவிட இயக்கங்களில் பங்குபெற்று, ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்தாங்க. சிலப்பதிகாரம் முதல் பாரதிதாசன் வரை படிக்க ஊக்கப்படுத்துனாங்க. அந்த சூழலை ஒப்பிடும்போது இப்போ அந்த மாதிரியான நிலை 99 விழுக்காடு இல்லை. இப்ப இருக்குற தமிழாசிரியர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.

சொற்பொழிவுகள் கேட்கும் பழக்கம் உண்டா?
திருநெல்வேலியில் ரயில்வே பீடர்ஸ் ரோடு இருக்கு. அது பக்கத்துல கூட்டம் நடக்கும். பெருந்தலைவர்கள் எனும்போது ஆற்று மணலில் கூட்டம் நடக்கும். முத்துராமலிங்கத் தேவர், அண்ணா மாதிரி தலைவர்களின் கூட்டம் அங்கு நடக்கும்.
அறிஞர் அண்ணா கூட்டம் என்றால் ஒரு மாத காலம் விளம்பரம் செய்து கூட்டம் நடத்துவாங்க. பெரும்பாலும் ஆற்று மணலில்தான் கூட்டம் நடத்துவாங்க. தாமிரபரணி ஆற்றுப் பாலத்துக்கும் சிந்து பூந்துறைக்கும் இடைப்பட்ட இடம் அது. இப்போது முட்புதராய்க் கிடக்கிறது. அப்போது கடற்கரை மணல்வெளி போல இருக்கும். எல்லாக் கட்சிக் கூட்டங்களும் அங்கு நடக்கும்.

அப்போது சிந்துபூந்துறையில் பொற்கொல்லர் ஒருவர் ‘விடுதலை’ உள்ளிட்ட சிறு பிரசுரங்களைப் படிக்கத் தருவார். படித்த பின் ‘புரிந்ததா,?’ என்று கேட்பார். அந்த நேரத்தில் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி எந்த அறிமுகமும் கிடையாது. 1958க்கு அப்புறம் சீர்காழியில் அப்பாவுடன் சில நாட்கள் தங்கினேன். நெல் அரைத்து
கொள்முதல் செய்து அரசு பர்மிட் வாங்கி கேரளாவுக்கு அனுப்புவது அவர்கள் வேலை. வாழ்க்கையில் என்ன ஆகப் போகிறோம் என்று புரியாத சூழ்நிலை. கிராமத்தில் மின்சாரம் வந்த நேரம். பம்புசெட் ஒன்று வைத்து‘ ‘நவீன வேளாண்மை’ செய்யப் போனேன். அது எவ்வளவு முட்டாள் தனமானதுன்னு இப்பப் புரியுது. பிறகு திடீர்னுஅதையெல்லாம் விட்டுட்டு மேல்படிப்பு படிக்கப் போனேன். அப்ப எனக்கு 20 வயது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1963ல் சேர்ந்தேன்.

Leave A Reply

%d bloggers like this: