கோவை, செப்.3-
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், உயிரை பறிக்கும் நீட் தேர்வை இனியும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்கிற முழக்கத்துடன் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. கோவை அன்னூர் பயணியர் மாளிகை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அனிதாவின் உயிரை பறித்த நீட்தேர்வு மேலும் பலரை காவு வாங்கும் என்பதை உணர்த்தும் வகையில் இளைஞர்கள் தூக்கில் தொங்குவது போல சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் அருள்பிரகாஷ், மேகநாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று மத்திய பாஜக மோடி அரசையும், மாநில எடப்பாடி அரசையும் கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். கோவை புலியகுளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, சிபிஐ, திமுக உள்ளிட்ட கட்சிகள் இனைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முன்னதாக, அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து போராட்டக்காரர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் சிபிஎம் கோவை கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துடியலூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துடியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக்குழு செயலாளர் என்.பாலமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், ஒன்றிய தலைவர் ராஜா, செயலாளர் கோகுல கிருஷ்ணன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எல்.விஜயா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், கோவை இருகூர் ரயில்நிலையத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட இடிகரை பகுதியில் சிபிஎம், திமுக உள்ளிட்ட கட்சியினரும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிக்கால் தொழிலாளர்களும் மறைந்த அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலம்:
மாணவி அனிதாவுக்கு வீர அஞ்சலி செலுத்தியும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசியர் அ.குமரேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஐ.ஞானசவுந்திரி, ஜி.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றேனர்.

இதேபோல், ஒமலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாசலம் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும், சேலம் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்:
போயம்பாளையம் பிரிவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் அருண்குமார் தலைமை வகித்தார். தமிழர் நடுவம் தங்கராசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கிரி, தமிழன் வடிவேலு, சங்கர், திருப்பூர் குணா, விடுதலைச் சிறுத்தைகள் துரைவளவன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: