மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று நம்பவைத்து கழுத்தறுத்த மத்திய பாஜக அரசு கடைசியில் அப்பாவி மாணவியை கொன்றுவிட்டது. சுமைப்பணி தொழிலாளியின் மகளாகப் பிறந்த அனிதா நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் தலைமை நீதிமன்றம் வரை சென்று போராடிப்பார்த்தார். நீதிமறுக்கப்பட்டது. அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் நீதிமான்களும் ஏழை மாணவி யின் உயிரை மட்டுமல்ல, சமூக நீதியையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அந்த மாணவியின் உன்னதமான மருத்துவக் கனவையும் சுக்குநூறாக உடைத்து விட்டார்கள். இதுபோன்ற துயர நிலைக்கு அந்த மாணவியை தள்ளியவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

உயிரோடு இருக்கும்போது ஊடகங்கள் வாயிலாக அனிதா கேட்ட கேள்விகள் அதிகார வர்க்கத்தின் காதுகளுக்கு எட்டியதோ இல்லையோ, நாடு முழுவதும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் காதுகளுக்கு எட்டியது. “இனியும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்; வீதியில் இறங்கிப்போராடுவோம்“ என்பதை நிரூபித்துவிட்டனர். இந்தப்போராட்டம் தமிழகத்துடன் நிற்கப்போவ தில்லை. பாஜக அரசை அதிகாரத்தில் இருந்து இறக்கும் வரை தொடரும். பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாநிலத்தின் உரிமைகளை ஒன்றன் பின் ஒன்றாக மத்திய அரசிடம் காவு கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சி யாளர்களையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

நீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறமுடியாமல் போய்விட்டதாகவும் கூறி தனதுபொறுப்பில் இருந்து தமிழக ஆட்சியாளர்கள் நழுவப்பார்க்கிறார்கள். மத்திய ஆட்சியாளர்களோ தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றினால் ஒத்துழைக்கத்தயார் என்று கூறிவிட்டு உச்சநீதிமன்றத் தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனது உண்மையான முகத்தைக் காட்டினர். கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நீட்தேர்வு எழுது வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித் திருந்தார். தனது கட்சியின் தலைவர் அளித்தவாக்குறுதியைக் கூட நிறைவேற்ற மனமில்லா மல் தில்லி எஜமானர்களின் சுண்டுவிரல் அசைவுக்கு ஆடும் பொம்மைகளாக தமிழக ஆட்சி யாளர்கள் மாறியிருப்பது வேதனை தருகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்காலிக தீர்வல்ல, நிரந்தரமாக நுழைவுத்தேர்வே கூடாது என்ற முழக்கத்தை மேலும் வலிமையாக எழுப்பவேண்டியதன் அவசியத்தை அனிதாவின் மரணம் நமக்கு உணர்த்தியுள்ளது. அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டிய லிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றுவது அவசியம். நாடு முழுவதும் கல்வி முறையும், பாடத்திட்டமும் ஒன்றாக இல்லாத போது ஒரே நுழைவுத்தேர்வு என்பது அப்பட்ட மான மோசடி என்பதை ஓங்கிச் சொல்வோம்.

Leave A Reply

%d bloggers like this: