அனிதா

நீட் தேர்வை எதிர்த்து நீதிப் போராட்டம் நடத்திய அனிதா, அந்தத் தேர்வுக்கு முதல் பலி ஆகியிருக்கிறார். இதைத் தற்கொலை என்கிறது சட்டம். ‘எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்று ஆறுதல் வார்த்தைகளை இப்போது சொல்லலாம். தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான அடித்தட்டு மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்திருக்க வேண்டிய அனிதா, இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடாது. ஆனால், அவரை இப்படிப்பட்ட ஒரு முடிவை நோக்கித் தள்ளிய சூழ்நிலைகளையும் மனிதர்களையும் யார் தண்டிப்பது?

ப்ளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் எடுத்தவரை, மருத்துவ கட் ஆஃப் 196.5 பெற்று உரிமையோடு மாநிலத்தின் முதன்மையான கல்லூரியில் மருத்துவம் படிக்க வேண்டியவரை, ஏதோ ஒரு கிராமப்புற மருத்துவமனையின் மார்ச்சுவரிக்குப் பிணமாக அனுப்பியதற்கு யார் பொறுப்பு? இரண்டு ஆண்டுகள் உழைப்பைச் செலுத்திப் படித்து, மதிப்பெண்களில் முதன்மை பெற்றும், தான் நினைத்த கனவை எட்ட முடியாத துயரத்துக்கு ஒரு அடித்தட்டுப் பெண் தள்ளப்படுகிறாள் என்றால், பிறகு இங்கு அரசுகள் எதற்கு? அதிகாரம் எதற்கு?

தான் நம்பிய அத்தனை அமைப்புகளும் கைவிட்டதால் எழுந்த மனச்சோர்வில், ஏதுமறியாத ஒரு பெண் நொடிப் பொழுதில் இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என்பதை அரசுகளோ நீதிமன்றமோ ஏன் உணரவில்லை? வழி தெரியாத இருளில் தவிக்கும் ஓர் அபலைக்கு வேறு என்ன தீர்வு தந்தன இந்த அமைப்புகள்?

விஜயபாஸ்கர்‘நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டு தமிழகத்துக்கு விலக்கு பெறுவோம்’ எனத் திரும்பத் திரும்ப நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி வந்தார்கள் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் மற்ற அதிகாரிகளும். சட்டமன்ற அவைக்குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் தெரியும்… எத்தனை முறை இதே விஷயத்தை விஜயபாஸ்கர் சொன்னார் என்று! விலக்கு தருவதற்கு மத்திய அரசு மறுத்தபோது, அவசரமாக இரண்டு மசோதாக்களை சட்டமன்றத்தில் தாக்கல்செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்கள். ஜல்லிக்கட்டு சட்டத்துக்காக டெல்லியில் போய் காத்திருந்தவர்களுக்கு, நீட் சட்டத்துக்கான மசோதா அவ்வளவு முக்கியம் என்று தோன்றவில்லை. ‘நீட் தேர்வு எழுத வேண்டுமா வேண்டாமா?’ என தமிழக மாணவர்கள் தூக்கம் மறந்து துக்கத்தில் தவித்தபோது, எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நாற்காலிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் அதே வேலையாக அலைந்தது.

ஹெச்.ராஜா‘தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை’ என்று திடீரென ஒருநாள் சொன்னார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒரு மாநில அரசு அனுப்பும் மசோதாவையே இந்த அளவில்தான் கையாள்வார்கள் என்றால், இவர்களை எல்லாம் நம்பி மனுக்களை அனுப்பித் தொலைக்கும் அப்பாவி குடிமக்கள் மீது கணக்கற்ற கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது. நிர்மலா சீதாராமன் இதைச் சொன்ன பிறகுதான், நம் அமைச்சர்கள் டெல்லிக்குக் காவடி எடுத்தார்கள். இடையில் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா, ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு விலக்கு கிடைக்காது’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிர்மலா சீதாராமனோ, ‘தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது’ என்றார். அந்த நம்பிக்கை நீர்க்குமிழியும் சில மணி நேரங்களில் உடைந்துபோனது.

முரண்பட்டுப் பேசுபவர்களை ‘இரட்டை நாக்கு’ என்பார்கள். மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கு இரண்டாயிரம் நாக்குகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகப் பேசுகின்றன. என்ன செய்ய முடியும் எளியவர்கள்? மத்திய அரசு வழக்கறிஞர் முதல் நாள் வந்து, ‘விலக்கு தரப்போகிறோம்’ என்கிறார். மூன்று நாள்கள் கழித்து வந்து, ‘தமிழகத்துக்கு மட்டும் தனியாகத் தர முடியாது’ என்கிறார். நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்களைத் தொடுகிற வசதியுள்ள நகர்ப்புற மாணவர்கள் சார்பில் ஆஜரானவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இந்த வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்துக் கேட்ட முக்கியமான கேள்வி, ‘நீட் தேர்வால் பாதிப்பு என்று உங்களுக்குக் கடைசி நேரத்தில்தான் தெரிந்ததா?’ என்பது. இதைவிட அவமானம் ஓர் அரசுக்கு இருக்க முடியாது. தங்கள் குடிமக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாத அரசைக்கூட நாம் வேறுவழியின்றி சகித்துக்கொள்ளலாம். ஆனால், முக்கியமான தருணத்தில் கைவிட்டு, மரணத்தை நோக்கித் தள்ளுகிற அரசைவிட மோசமான கொலைகாரன் வேறு யாரும் இருக்க முடியாது. ‘நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம்’ என்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

Leave A Reply

%d bloggers like this: