அரியலூர்,

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு கலைந்ததை அடுத்து அரியலூர் மாணவி அனிதா வெள்ளியன்று தற்கொலை செய்து கொண்டார். இதில் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அனிதாவின் மறைவிற்கு நீதிகேட்டு பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இதனிடையே அனிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 90 சதவிகித கடைகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மற்றும் மருந்துக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இதேபோல், மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுடச்சேரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அண்ணா சாலையில் இந்திய மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கீழ்பாக்கத்திலும் போராட்டம் நடக்கிறது. அரியலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கௌதமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில்  மாணவர் அமைப்பினர் ரயில் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கத்தினர் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

Leave A Reply