புதிய புரட்டு இந்தியாவில்
தேசிய பறவையே
கண்ணீரால் கருவுறும் போது,
பசுவில் 33 கோடி தேவர்கள்
குடிகொண்டு குலாவுவது
என்ன அதிசயமா !

அதனால்தான் என்னவோ
கோவில் சிலைகள் கூட
பெண்ணின் உடை இடைகளில்
இடறிடுமென பதறியதோ…?
உயர் நீதிமன்றம் !

உடைக்கு தடை கொடுத்து
உடல் முழுவதும் முக்காடிட்டு…
மண்டியிட்டு வரம்பெற்றிட
கட்டளையிட்டு; காவல் நின்றதோ..!

இடறிடும் சிலை எப்படி
எம்மக்களை காக்கும் ?
சிலைக்கு விலங்கிடுவதா?
சேலை இடுக்கிற்கு திரையிடுவதா ?
என்றோம்..அவ்வளவுதான்..!

ஆ… ஐயகோ…
ஆ.. இது என்ன பகுத்தறிவு…
மதக்கட்டுப்பாடடை மீறுவதா..!
இயற்கையே அழிந்து விட்டது..என
வைத்தியமே.. பைத்தியமானதே..!
அப்போதும் கூட.. நீதி தேவதையே
நீ நாண்டு கொள்ள வில்லையே…!

அனிதாவின் மரணம் மட்டும்
உன்னை அசைத்திடுமா.. என்ன?

எம்தங்கை அனிதா உன் காலடியில்
மண்டியிட்டு நீதி கேட்ட போது…
இரு தரப்பும் பாதிக்க கூடாது – என்றாயே !
அனிதாவிற்கு… அணி.. அணியாய்….
நம்பிக்கை துளிர்விட்டதே !

காவியோடு கரைந்த இலையும்
பச்சை துரோகமாய்..பல் இழிக்க..
உச்ச நீதிமன்றமே… நீ
பச்சோந்தியாய் மாறியது ஏன்?

நீ எந்த தரப்பிற்காக இருதரப்பு என்றாய்..!
அப்போது கூட என் தங்கையால்
தரம்பிரிக்க முடியலையே…!
தீர்ப்பில்தான் தெரிந்தது நீ ”அந்த” தரப்பு என்று.. !
எத்தனை முறைதான் வெட்டுவாய்
எங்களின் கட்டை விரலை….

காவிகளின் புதிய இந்தியாவில்
ஏழைகளெல்லாம் பாவிகளானோம்…!
நீதியேல்லாம் மநுநீதியாகியிருக்கிறதே…!…

அனிதாவின் உயிரை துடிக்க… துடிக்க
உறிஞ்சிய….. மநுநீதியே.!

அம்மணமாய் அலையும் உன்னை…                                                                                                       ஒரு நாள்……..
ஏகலைவன்கள் திரித்த கயிற்றில்
ஆடையணிந்தே தூக்கிலிடுவோம்…
Kannan Kavin

Leave A Reply

%d bloggers like this: