மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இன்று தன்னெழுச்சியாக நடந்து
வரும் போராட்டங்களை, அவற்றில் தலைவர்களின் கண்டன உரைகளை
ஜெயா பிளஸ் நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. நல்லது. ஆனால்
அடுத்தவர் போராட்டங்களை ஒளிபரப்புவதோடு ஏன் அம்மா அதிமுகவே
போராடக் கூடாது, அவற்றை ஒளிபரப்பக் கூடாது? 1 1/2 கோடி தொண்டர்கள்
இருப்பதாகச் சொல்லுகிறார்களே, அவர்களது வீடுகளிலும் அனிதாக்கள்
தோன்றக்கூடுமே!
-இராமலிங்கம் கதிரேசன்

வீட்டில் தனி அறை இல்லை!
ஏசி, மின் விசிறி இல்லை!
செல் போன் இல்லை!
பத்து நாள் ஆபீசுக்கு லீவு போட்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித்தரும்
தகுதியும், வசதியும் பெற்ற
அம்மா அப்பா இல்லை!
கண்விழித்துப் படிக்கும்போது
பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை!
அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும்போது யூ நோ என்று சொல்லும் தாத்தா இல்லை!
அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி
ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும்
ரே பான் கண்ணாடி மாமா இல்லை!
ஒரு மணி நேரத்திற்கு 500, 1000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை!
வீக் எண்ட் சினிமா, ஹோட்டல் இல்லை!
விடுமுறைக்கு செல்ல ஊர் இல்லை!
இருந்தாலும் 1176!
இதுதாண்டா மெரிட்டு!
– விஜயசங்கர் ராமச்சந்திரன்

தற்கொலை தவறு என்று உபதேசிப்பவர்களே, அது அனிதாவுக்கும் ​தெரியும்,
அனிதா மரணத்திற்கு தமிழக முதல்வரும் நிர்மலாசீத்தாராமனும் ராஜினாமா ​செய்ய வேண்டும். மரணத்திற்கு சட்டப்படி அனிதாவை தற்கொ​லைக்கு துாண்டிய அமைச்சர்களைக் கைது​செய்ய ​வேண்டும்.
மத்தியிலும் மாநிலத்திலும் ப்ளூவேல்கள் ஆட்சி
தற்கொலைக்கு துாண்டின
விரட்டுங்கள்!
– எஸ்ஏபி மார்க்ஸ்

கேள்வி: ”ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்… நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா…?”
”நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.”
”எப்படிச் சொல்கிறீர்கள்…?”

”அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம்.

எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற தில்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்துக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.”

”சரி… அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா… காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா…?”
”கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.

மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்’ தேர்வு.”
”புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்…?”

”உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குதடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.”
”இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா…?”

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.”

”தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?”

”தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா…? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் ‘ஒன்றாக ரேசில் ஓடுங்கள்’ என்கிறீர்கள்.

கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது… ‘விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன’ என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்…? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா….?”

”சரி, இதற்கு என்னதான் தீர்வு…?”

“கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி… கம்யூனிச தேசமான கியூபாவும் சரி… கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.”

”ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?””ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்… போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு”

அனிதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்தக் கண்களில் விரிந்திருக்கும் கனவுகளும், நம்பிக்கைகளும் தெரிகிறது.

’நீட் மட்டும் இல்லையென்றால், இந்த குழந்தை உயிரோடு சிரித்துக்கொண்டு இருந்திருப்பாள். அவளைப் பெற்றவர்கள் பார்த்து பூரித்திருப்பார்கள்’

கனத்தும் கொதித்தும் போகிறது மனசு.

தமிழகமே! உன் அருமைக் குழந்தை உன்னிடம் கடைசியாக என்ன சொல்லிச் சென்றாள்?
– ஜா.மாதவராஜ்

Leave A Reply

%d bloggers like this: