====மதுக்கூர் இராமலிங்கம்===
ஒரு தீக்குச்சியைப் போல தன்னை எரித்துக்கொண்டு போராட்ட பெருநெருப்பை பற்றவைத்திருக்கிறார் அனிதா. நீட் எனும் அநீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தோற்றநிலையில் தன்னுடைய உயிரை மாய்த்துகொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில், ‘அய்யோ அன்பு மகளே!’ என்ற அலறலும், அரற்றலும், இயலாமையும் பெருமூச்சும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அனிதாவின் துயரச்செய்தி தெரிந்தவுடனேயே பல இடங்களில் போராட்டம் துவங்கிவிட்டது. சனிக்கிழமையன்று மாநிலத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை அண்ணா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மறியல் செய்து கைதாகியுள்ளனர்.

அனிதா பிறந்த குழுமூருக்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் அருவியென கொட்டும் கண்ணீரில் தங்களது கண்ணீரையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவினரும் அவர்களுக்கு சொம்பு தூக்குபவர்களும் இன்னமும் நீட் எனும் மனு அநீதியை நியாயப்படுத்தி தங்கள் நாறவாயால் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மாநில அரசு சார்பில் 7லட்சம் நிதி வழங்கி அனிதாவின் உயிருக்கு விலை வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதை அரசியலாக்க வேண்டாம் என்று அன்றாடம் அரசியல் பேசும் தமிழிசை அருளாசி வழங்கியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா அனிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என புலனாய்வு பணியில் இறங்கியுள்ளார். ஜனசங்கத்தின் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜியின் மர்ம மரணத்தில் முடிச்சை முதலில் அவிழ்க்கட்டும் எச்.ராஜா.

நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு எல்லா முயற்சியும் மேற்கொண்டது. ஆனால் உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க மறுத்துவிட்டது என்று நழுவுகிறார் தமிழக அமைச்சர் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த கோப்புகளே காணாமல் போய்விட்டது. எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அப்போது தமிழக அரசு ஒரு வார்த்தையாவது மோடி அரசை கண்டித்ததா? தேங்காய்ச் சில்லுபோல உடைந்துகிடந்த அணிகளை ஒட்டவைக்க தமிழக அமைச்சர்கள் எடுத்த முயற்சியில் ஒரு துளியையாவது நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு எடுத்தார்களா? மூன்று அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்தார்களே? அப்போது நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதை ஒரு நிபந்தனையாக முன்வைத்தார்களா? எதுவுமே செய்யாமல் 7 லட்சம் கொடுத்து பிராயச்சித்தம் தேடுவது எந்த வகையில் நியாயம்?

தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றினால் மத்திய அரசு ஒத்துழைக்கத் தயார் என்று கூறினார் நிர்மலா சீதாராமன். தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு மோடி பிரானின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. விலக்கு கிடைத்துவிடும் என்று ஓயாமல் ஓதிக்கொண்டிருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஆனால் அவசரச் சட்டம் வருவதற்கு முன்னாலேயே அவசரமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நளினி சிதம்பரம். எதிர்வழக்காடியவர்தான் இன்றைக்கு தமிழகம் இழந்து தவிக்கும் அன்பு மகள் அனிதா. விசாரணையின் துவக்கத்தில் இந்தப் பிரச்சனையில் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு உரிமை உண்டு.

ஒப்புதல் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் ஒரு சில நாளிலேயே அதாவது அதிமுக இணைப்பை ஆளுநர் முடித்துவிட்ட நிலையில், அப்படியெல்லாம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று அந்தர்பல்டி, ஆகாச பல்டி அடித்தாரே, அப்போதுதான் அனிதா போன்ற ஏராளமான பிள்ளைகளின் தலையில் இடி விழுந்தது. மத்திய அரசு அடித்த பல்டியின் காரணமாகத்தான் உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க மறுத்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற மேல்நிலைத் தேர்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நீட்தேர்விலிருந்து இந்த ஆண்டு நிச்சயம் விலக்கு பெற்றுவிடுவோம் என்று கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்தார். கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் முன் முயற்சியால் நீட்டிலிருந்து விலக்கு பெற்றதால் இந்த ஆண்டு பெரும்பாலான மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு தயாராக இல்லை.

மாநில அரசின் பாடத்திட்டத்திலேயே கவனம் செலுத்தினர். அடுத்து வந்த அமைச்சர்களும் இதே வாக்குறுதியை வழங்கினர். ஆனால் மோடி அரசும் மாநில அதிமுக அரசும் நம்ப வைத்து கழுத்தறுத்தன. எனவேதான் அனிதா செய்து கொண்டது தற்கொலை அல்ல. மத்திய – மாநில அரசுகள் செய்த கொலை என்ற கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் படித்து 1,176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெறாதது ஏன் என்று சிலர் விளக்கெண்ணெய்த்தனமாக விளக்கம் கேட்கிறார்கள். நீட் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இல்லை. அது மத்திய பாடத்திட்டத்தின்கீழ் தான் இருந்தது.

மேலும் தமிழகத்திற்கு ஒரு கேள்வித்தாள், குஜராத்திற்கு ஒரு கேள்வித்தாள் என்று தனது கீழறுப்பு வேலையை மோடி அரசு இந்த விஷயத்திலும் செய்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என்று சுத்தியலை ஓங்கி அடித்த நீதிமான்கள் இந்த வழக்கில் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று கையை கழுவிவிட்டு பூரி சாப்பிட போய்விட்டார்கள்.

நீட் தேர்விற்காக சிறப்புப் பயிற்சிக்கு செல்லும் வசதி இல்லை என்று அனிதா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த பலர் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக இடம்கிடைக்காத நிலையில், பல லட்சம் செலவு செய்து தனியார் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றோம்; அதனால் இந்த ஆண்டு நீட்டாக உள்ளே நுழைந்துவிட்டோம் என்று பெருமை பொங்க பேட்டி கொடுத்தனர்.

நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஆங்காங்கே பல லட்ச ரூபாய் வாங்கத் தயாராக பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பளபளப்பான விளம்பரங்களை கொடுத்து வருகின்றன. இவற்றில் சேர சுமைப்பணி தொழிலாளியின் மகளும், ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் பிறந்தவருமான அனிதாவுக்கு வசதியோ, வாய்ப்போ இருந்திருக்குமா?நீட் தேர்விலிருந்து தற்காலிக விலக்கல்ல, நீட் தேர்வே கூடாது என்ற முழக்கம் எழுந்துள்ளது. கல்வி என்பது அவசர நிலைக்காலத்தில்தான் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு தற்போது கிட்டத்தட்ட மத்திய பட்டியலுக்கே போய்விட்டது.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான போராட்டம் தான் அனிதாவின் சாவைக் கண்டு தமிழகம் அதிர நடைபெறும் போராட்டம்.

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரப்போவதாக ஒரு புறத்தில் செய்திகள் கசிகின்றன. மறுபுறத்தில் தமிழகம் முழுவதும் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

போராட்டப் பெருநெருப்பு பரவுவதன் மூலமே எதிர்காலத்தில் அனிதாக்கள் தூக்கில் தொங்குவதை தடுக்க முடியும். இல்லையேல் ஏகலைவர்கள் தூக்கில் தொங்குவார்கள். சம்பூகர்கள் தங்களைத்தாங்களே அறுத்துக்கொண்டு சாவார்கள். அப்போதும் ஆர்எஸ்எஸ்-சும், அவர்களது சொம்பு தூக்கிகளும் உங்களுக்கெல்லாம் படிப்பதற்கும், நாகரிகமான வேலைக்கு போவதற்கும்தானே தகுதியில்லை என்றோம். சாவதற்கு தகுதியில்லை என்று எப்போதாவது சொல்லியிருக்கிறோமா என்று கேட்பார்கள்.

Leave A Reply

%d bloggers like this: