திருவனந்தபுரம்,

கேரளாவில் கோவில் முன்பாக இறைச்சி கழிவுகளை வீசி சாதி வன்முறையை தூண்ட முயன்ற பாஜக தலைவரின் மகனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் , அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினரும் இணைந்து கண்டுபிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள நீமாம் பகுதியில் உள்ள சிவன் கோவில் மற்றும் மேரிலேண்ட் ஸ்டுடியோவில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்கள் சிலர் இறைச்சி மற்றும் உணவு கழிவுகளை வீசி சென்றனர். பின் பகல் நேரங்களில் முஸ்லீம்கள் தான் இதை செய்கிறார்கள் என கூறி சாதி வன்முறையை தூண்ட முயற்சி செய்தனர்.

இது தொடர்பாக பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தும் , கழிவுகளை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் இதை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாத காரணத்தால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இறுதியில் வெள்ளியன்று இரவு அப்பகுதியின் பாஜக தலைவர் கிரீஷ் என்பவருக்கு சொந்தமான கேட்டரிங் நிறுவனத்தில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் எடுத்து வந்து அவரது மகன் அதை கோவிலின் முன்பாக வீசி செல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் , அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினரும் இணைந்து கண்டுபிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மிக பெரிய அளவில் செயல்படுத்த பாஜக அரசு முயன்று வரும் நிலையில் , அதன் ஆதரவாளர்கள் கழிவுகளை கொட்டி , பல சாதி மக்கள் ஒற்றுமையுடன் வாழும் பகுதியில் வன்முறையை தூண்ட முயலுகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக தலைவரின் மகன் மீதான வழக்கு இது என்பதால் , பாஜக மாவட்ட தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலருமான எம்.ஆர்.கோபன் இந்த வழக்கு தொடர்பாக சமரசம் செய்ய காவல் நிலையத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: