பேராசிரியர் கே. ராஜு
ரீஜெனெரான் அறிவியல் திறன் போட்டிகள் இளம் மாணவர்களின் அறிவியல் திறனைச் சோதிக்க ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இவை ஜூனியர் நோபல் பரிசுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களில் பலர் பின்னர் நோபல் பரிசுகள், மெக்ஆர்தர் பரிசுகள், சர்வதேச மெடல்கள் போன்ற பல்வேறு பரிசுகளைப் பெறுவதும் உண்டு.

இந்த ஆண்டு இந்திராணி தாஸ், அர்ஜுன் ரமணி ஆகிய இரு இந்தோ அமெரிக்க பதின்பருவத்தினரும் இந்த கௌரவமிக்க முதல் பரிசையும் மூன்றாவது பரிசையும் வென்றுள்ளனர். அர்ச்சனா வர்மா, பிரதிக் நாயுடு, விருந்தா மதன் ஆகிய மூவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளனர். எட்டு இளைஞர்கள் இறுதிச் சுற்றில் வந்த 40 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடமிருந்து 1,800 ஆராய்ச்சிக் கட்டுரைகள் மையத்திற்கு வருகின்றன. அவற்றில் முதல் வரிசையில் வரும் 300 விண்ணப்பதாரர்கள் அரைஇறுதிச் சுற்றாளர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். அதில் ஒவ்வொருவருக்கும் 1000 டாலர் பரிசு வழங்கப்படுகிறது. ஜனவரி இறுதியில் 40 மாணவர்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அவர்கள் வாஷிங்டனுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முதல் 10 இடங்களில் வரும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இறுதிச் சுற்றில் தேர்வாகும் ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 டாலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

முதல் பரிசு பெறும் மாணவருக்கு 2,50,000 டாலர், இரண்டாவது இடத்திற்குத் தேர்வாகும் மாணவருக்கு 1,75,000 டாலர், மூன்றாவது இடத்தில் வருபவருக்கு 1,50,000 டாலர் என பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பெறும் பரிசுகளைப் பொறுத்து போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பும் பள்ளிகளுக்கும் ரீஜெனெரான் கம்பெனி உரிய பரிசுகள் அளித்து கௌரவிக்கிறது. மூளை நோய்களுக்கும் மூளையில் ஏற்படும் காயங்களுக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட 17 வயதான இந்திராணி தாஸ் என்ற இந்தோ அமெரிக்கப் பெண்ணிற்கு இந்த ஆண்டு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. காயத்தினாலோ சிதைவை ஏற்படுத்தும் நோயினாலோ பாதிக்கப்படும் நியூரான்களின் தாக்குப் பிடிக்கும் திறனை மேம்படுத்த முடியும் என்பதை அவரது ஆய்வு தெளிவுபடுத்தியது.

கணிதத் துறையில் சிக்கலான வடிவியல் துறையின் பகுதி வேறுபாடு சமன்பாடுகளுக்கு புதிய முறையில் தீர்வினைக் கண்டுபிடித்தற்காக 18 வயது அமெரிக்க மாணவர் ஆரான் யெசர் என்ற மாணவர் இரண்டாவது பரிசினைப் பெற்றார்.

வரைபடக் கோட்பாட்டின் கணிதவியலையும் கணினி செய்நிரலாக்கத்தினையும் (computer programming) இணைத்து வலைப்பின்னல் கட்டமைப்பு தொடர்பான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் வழியைக் கண்டறிந்த அர்ஜுன் ரமணி என்ற 18 வயது இந்தோ அமெரிக்கன் மாணவருக்கு மூன்றாவது பரிசு கிடைத்திருக்கிறது.சத்தத்தினால் உருவாகும் மாசினைக் கண்காணிக்க ஸ்மார்ட் போன்;                                                                                                       ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி சத்தத்தினால் உருவாகும் மாசினைக் கண்காணிக்கும் புதிய வழிமுறை ஒன்றினை பாட்டியாலாவில் உள்ள தபார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனிதர்களின் ஸ்மார்ட்போன்கள் செயல்படும் முறையைப் பயன்படுத்தி இந்த கண்காணிப்பினைச் செய்ய முடிகிறது. சத்த அளவுகளைக் கண்டுபிடித்து அத்தகவல்களை ஒரு சர்வருக்கு அனுப்பி பிம்பங்கள் வடிவத்தில் கூகுள் வரைபடத்தில் பகிர்வதே இந்த முறை.

மக்கள் பங்கேற்பின் மூலம் சத்தத்தையே வரைபடமாக மாற்றிக் காண்பிப்பது சாத்தியமாகிறது. சத்தம் அதிகமாக உள்ள பகுதிகளைக் கண்டுபிடித்து உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எளிதில் செய்துகொள்ள இந்தப் புதிய முறை கைகொடுக்கும்.
(தகவல் : ஜூலை மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர்)

 

Leave A Reply

%d bloggers like this: