Shame !

அறிவிழந்த அரசுகளே, யாருக்கு முதலில் தகுதி வேண்டும்?!

பள்ளிகளுக்கும், மருத்துவக் கல்லூரிகளுக்கும், அவற்றின் கல்வித்தரத்திற்கும் வைக்கவேண்டிய தகுதிச் சோதனைகளை கற்றுக்கொள்ள வரும் மாணவர்க்கு வைக்கும் மடத்தமான ஒரு அணுகுமுறையே “நீட்”.

கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களுக்கும், கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் முதலில் தகுதியை உயர்த்தாமல், கற்றுக்கொள்ள வரும் பிஞ்சுகளுக்கு நேரடியாகத் தகுதிச் சோதனை நடத்தும் ஒரு அகில உலக அறிவியல் அணுகுமுறையை உங்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.

பெற்ற தாய், தந்தைக்குச் செய்யவேண்டிய கருத்தடை அறுவைச் சிகிச்சையை அவர்களுக்கு அப்போது பிறந்த குழந்தைக்கு செய்யும் ‘அறிவாளித்தனமே’ இது.

இந்தியாவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசதங்கள் உள்ளன. 120 கோடி மக்கள் வசிக்கிறார்கள். பல்வேறு மொழிபேசும் மக்கள், பல்வேறு இனம் சார்ந்த மக்கள், பல்வேறு சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில் வசிக்கும் மக்கள், இவர்கள் அனைவரையும் ஒரே அளவிலான அளவுகோலால் அளக்கமுடியாத நிதர்சன நிலை.

மலைவாழ், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பல சமூகப்படி நிலைகளில் இருந்து, விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்தும் ஒரு அடிகூட முன்னேறாமல் இருக்கும் கோடிக் கணக்கானோரைக் கொண்ட ஒரு நாடு.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கல்வி முறை (State Board) கொண்ட நாடு, மொழிக் கல்வி கொண்ட நாடு; மத்தியக் கல்வி (CBSE) கொண்ட நாடு, இவை தவிர Matric பள்ளிகள் என மூன்று வெவ்வேறு தர அளவில் படிக்கும் மாணவ மாணவிகள் பயிலும் நாட்டில், ஒரே நாளில் அதி மேதாவித்தனமான ஒரு வினாத்தாளைத் தயார் செய்து, மாணவ, மாணவிகளை அலையவிட்டு, அடித்து விரட்டி, உள்ளாடைகள் முதல் சோதித்து மிரட்டித் தேர்வு எழுத வைத்ததே கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

எந்தவித பரந்துபட்ட பார்வையும் இல்லாமல் மூடத்தமான காரியத்தை செய்ததன் விளைவே இன்று இந்த நாடு அனிதா என்ற சிறுபிள்ளையை இழந்து நிற்கிறது.

ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக்கூட சரிவரச் செய்யத் தகுதியற்ற ஒரு அரசாங்கம், மாணவர் வாழ்க்கையோடு விளையாடும் நீட் தேர்வை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டாமா ?

அப்படியென்றால் 1886 களில் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற முதல் மருத்துவர்களான கங்கூலி, அனந்தி கோபால் ஜோஷியில் இருந்து நீட் தேர்வு அறிமுகம் செய்தவரையில் 90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் உருவான, படித்து முடித்த, பணியில் உள்ள மருத்துவர்கள் அனைவருமே தகுதியற்றவர்களா ? அனைவருமே தரமற்றவர்களா ? அனைவருமே போலிகளா ?
என்ன காரணத்திற்காக இப்போது இப்படி ஒரு தேவை?

சுமார் 50 ஆண்டுகளாகவே, உலக அளவில் இந்திய மருத்துவர்களுக்கே, இந்திய செவிலியர்களுக்கே அதிக வரவேற்பு இருந்த நிலையில் நீட் தேர்வு எதற்காக ?

உங்கள் மூளையில் இருந்தது, இருப்பது…உயர் தரமான மருத்துவக் கல்வி அல்ல, “ஒரே நாடு ஒரே வரி”, “ஒரே நாடு ஒரே சட்டம்”, “ஒரே நாடு ஒரே கல்வி”…என்ற “ஒற்றைப்” பக்கவாத சிந்தனைதான்.

அந்தச் சிந்தனையின் முதல் பலிதான் அனிதா.

விஷ்வா விஸ்வநாத்

Leave A Reply