அரியலூர்,
அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.

குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரி பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி. அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.

அந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
+2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வுப் பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு,நீட் தேர்வால் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கடும் மன உளைச்சலில் இருந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave A Reply