பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
1947ம் ஆண்டில் நாம் பெற்ற அரசியல் சுதந்திரம், இந்தியாவின் சமூக, பொருளாதார சமத்துவத்திற்கு வித்திட்டது. அந்த விடுதலையினை புரட்சி என அழைக்கும் பேரா. பிரபாத் பட்னாயக், இன்று அதற்கு எதிராக கார்ப்பரேட் ஆதரவுடன் இந்துத்துவாவை நோக்கி நடைபெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகளை எதிர்ப்புரட்சி என அழைக்கிறார். அது குறித்த கவலையுடன் அவர் “பிரண்ட்லைன்” ஏட்டில் (1.9.2017) ஒரு நீண்ட கட்டுரையினை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான தொகுப்பு கீழே தரப்படுகிறது. – தொகுப்பு : இ.எம் ஜோசப் 

19ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் இந்தியாவில் ஒரு புறம் காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள், மறு புறம் சமூக நீதிக்கான போராட்டங்கள் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பெரிய இயக்கங்கள் நடந்தேறின. ஜோதிபா பூலே, பெரியார் ஈ.வே.ரா, அம்பேத்கர் ஆகியோர் தலைமையிலான சமூக நீதி இயக்கங்கள் அவை. இந்த இரண்டு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போலத் தோன்றினாலும், சமூக அடித்தளத்தில் அது மக்கள் மத்தியில் ஒரு பொதுவான எழுச்சியினை ஏற்படுத்தியது என்பதே உண்மை.

இத்தகைய இயக்கங்களின் பின்னணியில் தான், சுதந்திர இந்தியா குறித்த காங்கிரஸ் கட்சியின் கராச்சி மாநாட்டுத் தீர்மானம் இயற்றப்பட்டது. சகோதரத்துவம், சமத்துவம், அடிப்படை வாழ்வாதார உரிமைகள், நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை, மதம் சாரா அரசு நிர்வாகம் என சுதந்திர இந்தியாவின் விழுமியங்கள் அனைத்தும் அத்தீர்மானத்தில் இடம் பெற்றன. இவை தான் பின்னர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் செயல்பாட்டிற்கான சட்ட வடிவம் பெற்றன.

இந்து ராஜ்ஜியத்தை நோக்கி…..
இந்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக சாதி அமைப்பின் மூலம் ஏற்றத்தாழ்வுகள் நிறுவனப்படுத்தப் பட்டிருந்த நிலையில், இந்த அரசியல் சாசனம் உண்மையானதொரு சமூகப் புரட்சிக்கு வழி கோலியது. ஆனால், இன்று அதன் எழுபதாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் நிலையில், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்துவா குண்டர் படை எவ்வித அச்சமுமின்றி தெருக்களில் இறங்கி செய்து வருகிற அட்டூழியங்கள் இந்த எழுபது ஆண்டு சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றன.

நடைமுறையில், இது ஒரு எதிர்ப்புரட்சியினை நோக்கி நாட்டை இட்டுச் செல்கின்ற போக்கேயாகும். அறிவுப்பூர்வமான சிந்தனைகள், கல்வி நிலையங்கள் அனைத்துமே இன்று தாக்குதலுக்கு ஆளாகின்றன. அரசியல் ரீதியான எதிர்ப்பு அடக்கப்பட்டு, கார்ப்பரேட் சக்திகளின் துணையுடன் இந்து ராஜ்ஜியத்தை நோக்கிய பயணம் விரைவாக முன்னேறி வருகிறது.
நாம் முன்னதாகக் குறிப்பிட்ட இரண்டு இயக்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள் தான், இந்துத்துவா சக்திகளுக்கு தலைமை தாங்குகிறார்கள்.

வி.டி சாவர்க்கரைத் தவிர அவர்களது தலைவர்கள் வேறு எவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதில்லை. சாவர்க்கரும் பின்னர் அதிலிருந்து ஒதுங்கி விட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமல்லாமல், சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திலேயே, இந்தியாவை ஆட்சி செய்ய பிரிட்டிஷ்காரர்களை மீண்டும் அழைத்து வரவேண்டும் என்ற அளவிற்கு கருத்தோட்டம் கொண்டவராக இருந்தார்.

இன்று இந்துத்துவா சக்திகள் சந்தர்ப்பவாத நிலை எடுத்து அம்பேத்கரை கொண்டாடினாலும், இந்து மதம் அடிப்படையில் சாதி அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதால், அவர்கள் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் பகைமை கொண்டவர்களாகவே இருந்தனர் என வரலாற்றாசிரியர் சுவிரா ஜேய்ஸ்வால் வாதிடுகிறார். மகாத்மாவைக் கொன்றவர்களின் வழிவந்த இந்துத்துவா கூட்டத்தினர் இந்த எதிர்ப்புரட்சிக்கு தலைமை தாங்குகின்றனர் என்பது இயல்பானதே. புரட்சியிலிருந்து எதிர்ப்புரட்சிக்கு மாறிச் செல்லும் இந்தப் பயணத்தை எவ்வாறு விளக்குவது என்பதே இங்கு எழும் கேள்வி.

சங்கிலித் தொடர்!                                                                                                                                                                         இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், ஒன்றை நன்கு மனதில் கொள்ள வேண்டும். சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஒரு தளத்தில் கிடைக்கும் அழுத்தம், பிற தளங்களிலும் பிரதிபலிக்கும். அதே போன்று, ஒரு தளத்தில் சமத்துவம் சீர்குலைக்கப்படும் எனில், பிற தளங்களிலும் அது சீர்குலைக்கப்படும்.

பல தளங்களில், சமத்துவத்திற்காக நடைபெறும் போராட்டத்தில், இயக்கங்களுக்கு இடையிலான பரஸ்பர இணைவினை குறித்து அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அம்பேத்கர் ஆற்றிய நிறைவுரையில் அதனை அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

அரசியல் சமத்துவத்திற்கு ஈடு இணையான சமூக பொருளாதார சமத்துவம் உருவாக்கப்படவில்லை எனில் அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தும் அரசியல் சமத்துவம் சிதைக்கப்பட்டுவிடும் என அவர் எச்சரித்தார். நிலச்சீர்திருத்தமும் நில மறு விநியோகமும் அமலாக்கப்படாதது இந்தியாவின் ஜனநாயகப் புரட்சிக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவு. 1930களில் இதுகுறித்து தேசிய இயக்கம் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், நிலக் குவியலை உடைப்பதற்கு பயன்படவில்லை.

சில நிலப்பிரபுக்கள் முதலாளித்துவப் பண்ணை முறைக்கு மாறிச் சென்றனர். குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த சில இடை நிலைச் சாதிகளைச் சேர்ந்த பணக்கார விவசாயிகளுக்கு பெரிய நிலப்பரப்புக்களின் ஒரு பகுதி நிலம் கைமாறியது. நிலப்பிரபுக்களில் உயர்மட்ட 15 சதவீதத்தினருடைய நில உடைமை சில வடிவ மாற்றங்களைப் பெற்றது. கிராமப்புறங்கள் விவசாயிகளின் விவசாயம், நிலப்பிரபுக்களின் முதலாளித்துவம் என்ற கலவையாக மாறின.

சந்தை மற்றும் சமூக விளைவுகள்
நிலக்குவியல் தொடர்ந்து வந்த நிலையில், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் முன்னேற்றம் ஏற்படாததால் உள்நாட்டுச் சந்தை சுருங்கியே இருந்து வந்தது. மறு புறத்தில் நிலச் சீர்திருத்தம் இல்லாததால் விவசாய வளர்ச்சி விகிதமும் குறைவாகவே இருந்து வந்தது.

இவை சந்தையின் நிலைமை எனில், அதன் சமூக விளைவுகள் மறுபுறத்தில். சமூக ஒடுக்குமுறை, சாதி ஆதிக்கம், பழமைவாதம் கொண்ட ‘கிராம சமுதாயம்’ தொடர்ந்தது. சில இடைநிலைச் சாதிகள் மட்டுமே சமூகப் படிநிலைகளில் சற்று ஏற்றம் பெற்றன.

இதற்கு முன்னர் நிலமற்றவர்களில் மிகப் பெரிய பகுதியினரான தலித் மக்களுக்கு இப்போதும் நிலம் கிடைக்கவில்லை. பயிர் செய்யப்படாத நிலங்கள் இருந்தும் கூட அவை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை. இது ஒட்டு மொத்தத்தில் தேவைக்கு அதிகமாக நிலமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையினை பெருக்கியிருந்தது. இவ்வாறு, உரிய நில மறு விநியோகம் இல்லாததன் விளைவாக, சமூக பொருளாதார சமத்துவத்தினை உருவாக்க இயலவில்லை.

தொடக்கக் காலங்களில், நில விநியோகம் முதலாளித்துவ வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்து வந்தது. ஆனால், பின்பு தாமதமாக முதலாளித்துவத்திற்கு வந்த நாடுகளில் அதனை முதலாளிகள் தவிர்த்துவிட்டனர். நில உடைமையின் மீது கை வைத்தால், அடுத்த கட்டத்தில் அது தங்கள் உடைமைக்கும் ஆபத்தாக முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்படி நடந்து கொண்டனர்.

அத்தகைய சமத்துவமின்மை முதலாளித்துவ வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றாலும், அதனை லைசன்ஸ் முறை, நிதிக் கட்டுப்பாடுகள், பொதுத்துறை போன்ற சில உத்திகளைப் பயன்படுத்தி சமாளித்துக் கொள்ளலாம் என, அன்றைய அரசியல் தலைமை முடிவு செய்தது. எனினும், வளர்ச்சிக்கு ஊறு செய்யும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான தேவையும் அவர்களுக்கு ஏற்பட்டது. அன்றைய பிரதமர் நேரு அதற்காக, பொருளாதாரப் புள்ளியல் அறிஞர் மகலநோபிஸ் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவினை அமைத்தார்.

அரசுக் கட்டுப்பாட்டு பொருளாதாரம்
எப்படி இருப்பினும், முந்தைய கால அரசுக் கட்டுப்பாட்டுப் பொருளாதாரம் (DIRIGISME) இன்றைய நவீன தாராளவாதப் பொருளாதாரத்தை விட சாமானிய மக்களுக்கு அதிகம் உதவக் கூடியதாகவே இருந்தது. அதற்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டினையும் முன்வைக்க முடியும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில், தனி நபர் சராசரி உணவு தானிய அளவு 200 கிராம்.

அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 1939 – 44 காலங்களில் 148.5 கிராம் ஆக மாறியது. 1945 – 46 காலத்தில் அது 136.8 கிராம் ஆக மேலும் குறைந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் அது உயரத் தொடங்கி, 1980களில் 180 கிராம் என்ற அளவினைத் தொட்டது. அதன் பின்னர், நவீன தாராளவாதப் பின்னணியில் குறையத் தொடங்கி 2012 – 14 காலண்டர் ஆண்டுகளில், அது 163 கிராம் ஆகக் குறைந்தது.

அதே போன்று பொருளாதாரத்தில் உற்பத்திக் கட்டமைப்பினைப் பரவலாக்கி, திறன் பெற்ற தொழிலாளர் படையினையும் அது உருவாக்கியது. எனினும், அறியாமை ஒழிப்பு, தொடக்க நிலைக்கல்வி, பொது சுகாதாரம் போன்ற அம்சங்களில் கோட்டை விட்டது அதனுடைய பலவீனம். (நவீன தாராளவாதம் இந்த அம்சங்களில் நிலைமையினை மேலும் மோசமாக்கியது). அரசின் கட்டுப்பாடுகளுக்குப் பின்னரும், இது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தது.

முதலாளித்துவத்தின் தன்னிச்சை இயல்புப் போக்கு, அரசுக் கட்டுப்பாட்டின் அனைத்து அம்சங்களையும் உடைத்தெறிந்தது. அடுத்த கட்டத்தில் அவை அனைத்தும் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டு கார்ப்பரேட் மற்றும் நிதி முதலாளிகளும், அந்நிய மூலதனமும் கைகோர்த்து உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனத்தினுடன் நெருக்கமாக இணைந்தனர்.

நவீன தாராளவாதம்
எவ்வித எதிர்ப்பினையும் முறியடிக்கும் வல்லமை சர்வதேச நிதி மூலதனத்திற்கு உண்டு என வாதிட முடியும். அதுவும் சோவியத் யூனியன் சரிவிற்குப் பின்னர் அது பெரிதும் சாத்தியமாகி விட்டது எனவும் கூறலாம். வர்த்தகம் மற்றும் மூலதனக் கட்டுப்பாடுகள் உடைத்தெறியப் பட்டன. ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிராக தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு உதவிய பொதுத்துறை பலவீனப்படுத்தப்பட்டது. வர்க்கங்களுக்கு எல்லாம் மேலாக நின்றிருந்த தேசிய அரசின் இறையாண்மை பறிக்கப்பட்டது. வளர்ச்சி குன்றிய பொருளாதாரம், சுருங்கிப் போன உள்நாட்டுச் சந்தை, அதன் காரணமாகவே குறைந்து போன சமூக ஆதரவு, நிராசைகளின் பின்னணியில் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற இந்திய பெரு முதலாளிகளின் துடிப்பு – இவை அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டுப் பொருளாதாரத்திலிருந்து நாட்டை நவீன தாராளவாதத்திற்கு உந்தித் தள்ளி விட்டது.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் தகவல் தொழில்நுட்ப சேவைக்கான வேலைகள் இந்திய நாட்டிற்கு மாற்றம் (அவுட் சோர்ஸ்) செய்யப்பட்ட நிலையில் இந்நாட்டில், சில லட்சம் உயர் ஊதிய வேலைகள் உருவாகின. சேவை ஏற்றுமதி அதிகரிப்பின் மூலம் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி தாராளமாக்கப்பட்டதனால், ஆடம்பரப் பண்டங்கள் உயர் செல்வந்தர்களின் பயன்பாட்டிற்கு உதவியிருக்கின்றன. மொத்தத்தில், நவீன தாராளவாதம் ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிவாக்கியிருக்கிறது. இந்தியாவின் உயர் தட்டில் உள்ள ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு அறுபது சதவீத இந்தியர்களின் சொத்து மதிப்பிற்கு சமம் எனும் போது, ஏற்றத்தாழ்வுகளின் அளவினைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? காரல் மார்க்ஸ் குறிப்பிட்ட புராதன உபரிக் குவிப்பு (PRIMITIVE ACCUMULATION) என்ற சுரண்டல் முறையினைப் பயன்படுத்துவதையும் நவீன தாராளவாதம் விட்டு வைக்கவில்லை. சட்டங்கள் மூலம் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பது, இடுபொருள் விலையேற்றம் உள்ளிட்ட நெருக்கடிகள் மூலம் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது, சிறு தொழில்களை திட்டமிட்டு அழிப்பது, நிரந்தரமற்ற தற்காலிகத் தொழிலாளர்களை உருவாக்குவது என பல வழிகளிலும் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

பலவீனப்படும் தொழிற்சங்கங்கள்
பெருகி வரும் வேலையில்லாப் பட்டாளம், நிரந்தரமற்ற தற்காலிக வேலைகள் என பல காரணங்களாலும் தொழிற்சங்கங்கள் பலவீனமடைந்து வருகின்றன. ஆனால், அது மட்டுமே காரணம் எனச் சொல்லி விட முடியாது. ஒப்பீட்டு அளவில், தனியார் துறையை விட பொதுத்துறையில் தொழிற்சங்கங்கள் பலமாக செயல்பட முடிந்தது. இன்று பொதுத்துறை சிதைக்கப்பட்டு வருகிறது. இது தவிர, இன்று நிதி மூலதனம் சர்வதேசத் தன்மை கொண்டதாக உள்ள போது, தொழிற்சங்கங்கள் தேசிய எல்லைக்குள் தான் செயல்பட முடிகிறது என்பதும் அந்த பலவீனத்திற்கு மற்றொரு காரணம். மேற்கண்ட போக்குகளின் பொருளாதார விளைவுகள் மிக மோசமானவை. இவற்றின் விளைவாக, நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற நான்கு வகையினரின் உண்மை ஊதியங்களும் கீழ் நோக்கித் தள்ளப்பட்டுவிட்டன.

1993-94 காலத்தையும் 1993க்குப் பிந்தைய காலத்தையும் ஒப்பிட்டால், 1993க்குப் பின்னர் உண்மை ஊதியம் உயரவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். மறுபுறத்தில், இதே காலகட்டத்தில், தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் வெகுவாக உயர்ந்ததை அடுத்து, முதலாளிகளுக்குக் கிடைத்த உபரி மதிப்பும் வெகுவாய் உயர்ந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இப்படித்தான் அதிகரித்தன.

தொழிற்சங்கங்கள் பலவீனமடையும் போது, அந்தப் பலவீனம் சமூக விளைவுகளையும் உருவாக்குகிறது. பொருளாதாரம் சம்பந்தப்படாத துறைகளில் கூட அவர்களால் திறம்படத் தலையிட முடியவில்லை. விவசாயிகளுக்கு எதிராக செய்யப்பட்ட புராதனச் சுரண்டல் முறை, தொழிலாளர்களின் சமூக வலிமையினையும் பலவீனப்படுத்தி விட்டது.

சமூக எதிர்ப்புரட்சியின் தொடக்கம்
இந்தப் பொருளாதார சமத்துவமின்மை மறுபுறத்தில் சமூக சமத்துவமின்மைக்கு வழி கோலியது. அது தவிர, நவீன தாராளவாதத்திற்கு அதில் பெரிய பங்கு உண்டு. ஒன்று, பொதுத்துறை சிதைக்கப்பட்டதால் தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு போன்ற பயன்கள் குறையத் தொடங்கின. இரண்டாவது, கல்வி தனியார்மயமாக்கப்பட்டது, அதன் விளைவாக, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகி விட்டது.

பல பெரு நகரங்களில் வெளிநாடுகளிலிருந்து அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சேவைகளுக்கான வேலைகள் காரணமாக நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு உலகமயம் சற்று பயன்பட்டது. அதுவும் கூட அதற்கான திறன் பெற முடிந்த உயர் சாதியினருக்கே அதில் அதிகம் வாய்ப்புக்கள் கிடைத்தன.அப்படிப் பயன் பெற்றவர்கள், அதனை தங்களுக்கு கிடைத்த சலுகை எனச் சொல்லாமல், அது தங்களுடைய திறமை எனக் கூறிக் கொண்டார்கள். இதில் பயன் கிட்டாதவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினரின் குழந்தைகளால் அதனைச் செய்ய முடியாது என்ற உயர் சாதி கர்வம் முன்னுக்கு வந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர், நிலச் சீர்திருத்தம் இல்லாமையும், அத்துடன் பின்பற்றப்பட்ட முதலாளித்துவப் பாதையும் இவ்வாறு சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. நவீன தாராளவாத காலத்தில் அவை மேலும் விரிவாக்கப்பட்டன. இதுவே, சமூக எதிர்ப்புரட்சியின் தொடக்கமாக அமைந்தது.

இன்று ஆட்சியில் இருக்கும் பாசிச குணம் கொண்ட மதவெறி இந்துத்துவா கும்பல், இந்த சமூக எதிர்ப் புரட்சியினை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது. இந்திய அரசு பாசிச அரசு இல்லை எனினும், அதனை நோக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது உண்மையே. அதன் பொருள் என்னவெனில், அண்ணல் அம்பேத்கர் அப்போதே தெரிவித்த அச்சத்தின் படி, சமூக –பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் வளர்ச்சி, இறுதியில் அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தியிருக்கும் அரசியல் சமத்துவத்தையே அழித்து விடும் என்பதே.

பாசிச எழுச்சி
இந்தியாவில் நாம் காணும் பாசிச எழுச்சி உலக அளவிலான ஒரு போக்கின் ஒரு பகுதியே. அமெரிக்காவில், அநேகமாக வெற்றி பெறமாட்டார் என நினைத்த டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். ஐரோப்பாவில் பாசிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு பெருகி வருகிறது. இவை எல்லாம் 2008ம் ஆண்டில் தொடங்கி இன்றும் மீள முடியாமல் தொடர்ந்து வரும் உலகப் முதலாளித்துவ நெருக்கடியுடன் மிக நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பு மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு அதன் விளைவாக புரட்சிகரச் சக்திகளின் சவாலையும், அச்சுறுத்தலையும் சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில் இடதுசாரிச் சக்திகளை அழித்தொழிக்கும் தேவையும் முதலாளித்துவத்திற்கு ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் தான் பாசிசம் தலை தூக்குகிறது என்ற ஒரு பொதுவான புரிதல் உள்ளது.

அத்தகைய நிலையில், ரஷ்யாவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான “பிளாக் ஹண்ட்ரட்” போன்ற கொலைகாரப் படைகள் இடதுசாரிகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்பது உண்மையே. அவற்றிற்கு பாசிச நோக்கங்கள் இருக்கக் கூடும். அவை ஒரு இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடும். தொழிலாளி வர்க்க இயக்கம் வலுவிழக்கும் நேரத்தில் தான், வால்டர் பெஞ்சமின் குறிப்பிடுவது போல, அது வலுப்பெறும். தொழிலாளி வர்க்க இயக்கம் வலுவாக உள்ள போது அது நடக்காது. ஆனால், பாசிசம் என்பது அதையெல்லாம் தாண்டியது.

முதலாளித்துவ அமைப்பு தனது இறுதி நிலைக்கு (DEAD END) வந்து விட்டது. நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து மேற்கொண்டு புதிய உத்திகள் எதுவும் தாராளவாத பூர்ஷ்வாக்களுக்கு கிடைக்கவில்லை. தொழிலாளி வர்க்கமும் திறம்பட ஒரு சவாலை ஏற்படுத்த முடியவில்லை.இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் கட்டத்தில் தான் பாசிசம் வளரத் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில் தான், மக்களின் ஒரு பெரும் பகுதி – குறிப்பாக, நடுத்தர வர்க்கப் பகுதிகள், குட்டி பூர்ஷ்வாக்கள், ஏன் தொழிலாளர்களின் ஒரு பகுதியே கூட – பாசிச முகாமை நோக்கி நகரத் தொடங்குகிறது.

இரட்சகர்கள்!
அவர்களுக்கு ஏதோ வழி இருப்பதாக நினைத்து அவர்கள் அங்கு செல்லவில்லை. வழி ஏதும் இல்லாததாலேயே செல்கிறார்கள். இந்தக் கட்டத்தில் தான் “இரட்சகர்கள்” (MESSIAH) உருவாக்கப்படுகின்றனர். நெருக்கடிக்குக் காரணம் அமைப்பே என்பதற்குப் பதிலாக, நாட்டில் இருக்கும் ( ஒரு நாட்டில் யூதர்கள், இன்னொரு நாட்டில் இஸ்லாமியர் போன்ற) சில குறிப்பிட்ட இனம் அல்லது மதப் பிரிவினரே காரணம் எனக் கூறுவார்கள். அதன் பின்னர் அவர்கள் பேசுவது எல்லாம் பகுத்தறிவுக்கு பொருந்தாதவையாகவே (UNREASON) இருக்கும். ஒவ்வொரு வாதமும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கும்.இந்தியாவில் நவீன தாராளவாதம் பொய்த்துப்போன நிலையில், மேலும் புதிய சில நவீன தாராளவாத முழக்கங்களை எழுப்புகிறார் மோடி. மறுபுறத்தில் அமெரிக்காவில் டிரம்ப் நவீன தாராளவாதத்திற்கு எதிராக முழங்குகிறார். நம்மவர் ‘மேம்பாடு’ (DEVELOPMENT) என்கிறார். டிரம்ப் “மேற்கத்திய கலாச்சாரத்தினைக் காப்பது” என்கிறார். தீர்வு என்ற வகையில் ஒரு அறிவார்ந்த பொருளாதாரச் செயல் திட்டம் என்பது இவர்களுக்கு இரண்டாம் பட்சமே.
கார்ப்பரேட் மூலதனமும், இந்துத்துவாவும்!

கார்ப்பரேட் – நிதி ஏகபோகம் பாசிச இயக்கத்தை சுவீகரித்துக் கொள்கிறது, அதற்கு நிதி உதவி அளிக்கிறது, தனக்கு வெளியே இருக்கும் அந்த இயக்கத்தினை அது பெருமளவில் ஊக்குவிக்கிறது. இடதுசாரிகளின் சக்தியைக் கண்டு அஞ்சி, அதைச் செய்யவில்லை. “நிலைத்தன்மை இன்மை’ “குழப்பம்’ “அமைப்பிற்கும், தனது ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தல்” என்ற வகையில் அவற்றை எதிர்கொள்ளும் நோக்கிலும், பொதுவாக நவீன தாராளவாதத்திற்கு துணை செய்யும் என்ற நோக்கிலுமே அதன் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைகின்றன. இந்த வகையில் தான், கார்ப்பரேட் மூலதனத்திற்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் இடையிலான கூட்டணி உருவாகியிருக்கிறது.

சம்பிரதாய பூர்வமான பாசிசத்திற்கும், அதன் இன்றைய வடிவத்திற்கும் வேறுபாடு உண்டு. 1930களில் சில நாடுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் போர், அழிவு என்ற நிலைக்கு முன்பாகவே ‘பெரு வீழ்ச்சி’ நெருக்கடியினை, சமாளித்து விட்டனர். அந்த உத்தியைத்தான் இன்று பின்னோக்கிப் பார்த்து, “இராணுவ கீனீஷியவாதம்” (MILITARY KEYNESIANISM) என அழைக்கிறார்கள். ஆனால், அந்த இராணுவ கீனீஷியத்தினை அமலாக்குவது கூட இன்று சாத்தியமல்ல.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், இன்று உள்நாட்டு கிராக்கியினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனில், நிதிப் பற்றாக்குறையினை உயர்த்த வேண்டும், முதலாளிகள் மீதான வரிகளை உயர்த்த வேண்டும். ஆனால், இந்த இரண்டு வழிகளையும் உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் அனுமதிப்பதில்லை. சுருங்கக் கூறின், உலகமயமாக்கப்பட்ட மூலதனத்தை நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் சக்தி எந்த தேசிய அரசிற்கும் இல்லை. அது பாசிச அரசாக இருந்தாலும் கூட அது சாத்தியமில்லை.

இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு முன்னால்….
இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளுக்கு, எதிர்ப் புரட்சியினை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பினை இந்தச் சூழ்நிலை வழங்கியிருக்கிறது என்பதையும் இங்கு மறக்கக் கூடாது. ஆனால், அதை ஒரு மாற்றுச் செயல் திட்டத்தின் மூலம் தான் செய்ய முடியும். சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தினை வலுப்படுத்துகின்ற திட்டமாக அது அமைய வேண்டும். நவீன தாராளவாதத்திலிருந்து விடுபடாமல் அது சாத்தியமல்ல.

அரசியல் சாசனம் அளித்திருக்கும் அரசியல் உரிமைகளை நடைமுறை வாழ்வில் அனுபவிக்க வேண்டும் எனில், சட்டப்பூர்வமான பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய ஒரு மாற்று செயல் திட்டத்தினை முன் வைக்க வேண்டும். அனைவருக்கும் பொருந்துகிற வகையில், அதை உறுதி செய்ய வேண்டும்.

உணவுக்கான உரிமை, வேலைக்கான உரிமைகள் வேண்டும். ஒரு கட்டம் வரையிலான கல்வி, அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான மருத்துவ சேவை, ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான வசதிகள் போன்றவற்றிற்கு அரசின் பொது நிதி ஏற்பாடு வேண்டும். இந்த அடிப்படையில் மாற்றுத் திட்டம் அமைய வேண்டும். ஜி.டி.பி மதிப்பில் 10 சதவீதம் ஒதுக்கினாலே இதைச் சாதித்து விட முடியும்.

1931 கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தினை விரிவுபடுத்துவதன் மூலம், அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டுவதற்கு உறுதி எடுக்க வேண்டும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், மதவெறி பாசிஸ்டுகளின் தீவிரமான அச்சுறுத்தலின் பின்னணியில், நமது குடியரசினைக் காப்பதற்கு இந்த உறுதி மிக முக்கியத் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: