சென்னை,

பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராக பணியாற்றி வரும் இளம்பெண்(21) ஒருவர், தமது சொந்த ஊரான விஜயவாடாவுக்கு ரயிலில் சென்றிருக்கிறார். முன்பதிவு இருக்கை உறுதி செய்யப்படாததால், ரயிலில் நின்ற படியே அவர் தமது தோழிகளுடன் பயணித்துள்ளார். பெற்றோர் தமக்காக ஏற்பாடு செய்திருந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த அவரை, ரயிலில் இருந்த மூன்று இளைஞர்களில் இருவர்
பாலியல் துன்புறுத்தல் செய்ய , மற்றொரு இளைஞர் அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். இதனால் நிலைகுலைந்த அவர், தனக்கு உதவுமாறு சக பயணிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வராததால், அச்சத்தில் வேறு வழியின்றி ஓடும் ரயிலில் இருந்து சிங்கரயோகண்டா எனும் இடத்தை நெருங்கும் போது கீழே குதித்துள்ளார். பின்னர் அவரின் தோழிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.

கீழே குதித்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர்,  ஓங்கோலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் ரயில்வே காவலர்கள் கைது செய்தனர். விசாரணையில் மூன்று இளைஞர்களில் இருவர் பீகாரையும் மற்றொருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தையும் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. காவலர்கள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: